பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன்தான் – பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா

0

பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன்தான் என்ற படியால்தான் தனிநாட்டை உருவாக்கும் வகையில் விக்னேஸ்வரன் பேசுவதால் அவர் ஒரு போதும் பிரபாகரன் ஆக முடியாது என நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தேன்.

எனினும் எனது உரையைச் சிலர் தவறாக விளங்கி விட்டார்கள். என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


“விக்னேஸ்வரன் கொலை செய்யப்படுவார் என்று நான் மிரட்டவில்லை. கடந்த காலத்தில் சிங்களவர்களைக் குறைத்து மதிப்பிட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை உண்மை. அதை விக்னேஸ்வரன் நினைவில் வைத்துக் கொண்டு கருத்து வெளியிட வேண்டும் என்றே கூறியிருந்தேன். அதாவது அவரின் உயிரைப் பாதுகாக்கும் வகையிலேயே அந்த எச்சரிக்கையை விடுத்திருந்தேன்” எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.


“விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் அவருக்கே நான் பதிலுரை வழங்கியிருந்தேன். எனது பதிலுரை எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றியடையாவிட்டாலும் தமிழ் மக்கள் எனக்கு வழங்கிய அமோக ஆதரவை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.


“எனது உரை தொடர்பில் விக்னேஸ்வரன் அச்சம் அடையத் தேவையில்லை. அவர் எச்சரிக்கையாக இருந்தால் மட்டும் சரி. அவரின் உரை ராஜபக்ச அரசின் அரசியலுக்குத்தான் சாதகமாகப் போகின்றது. எனவே, அவர் இனிமேல் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்” எனவும் சரத் பொன்சேகா மேலும் கூறினார்.


தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் சிங்கள அரசுக்கு எச்சரிக்கை விடுத்து ஆற்றிய உரையும், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதிலளித்து ஆற்றிய மிரட்டல் உரையும் தமிழ் – சிங்களவர்களுக்கிடையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.