தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போலி முகத்திரை கிழித்தெறியப்படும்..!

0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு என்ற பெயரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனியும் உச்சரிக்குமாக இருந்தல் அவர்களின் முகத்திரைகள் கிளித்தெறியப்பட்டு கட்சி அலுவலகம் முன்னால் போராட்டம் மேற்கொள்ளப்படும் என வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஆகஸ்ட் 30 ம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம் அன்று கிளிநொச்சியில் எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் எழிச்சி பேரணியை ‘தமிழ் தேசிய மக்கள் முன்னணி குழப்பும் நோக்கோடு செயற்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

செல்வராசா கஜேந்திரனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவிலும் யாழ்ப்பாணத்திலும் எங்கள் அமைப்பின் பெயரை திருடி கட்சி முகவர்களை அழைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் நடைபெற்ற பேரணிக்கு நிவாரணம் தரப்படும் எனக் கூறி மக்கள் அழைத்து வரப்பட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் பெயரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டு மாவட்டத்தில் பேரணி நடத்தி தோல்வி அடைந்து தோல்விக்கு பின்னால் கடும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.

தேர்தலில் படு தோல்வி அடைந்து பின்கதவால் எம்.பி பதவி பெற்ற கஜேந்திரனும்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு கட்சி உறுப்பினர் விஜயனும் எமது அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிளிநொச்சி பேரணிக்கு மக்களை செல்லவிடாது பொலிசார் ஊடாக இடையூறுகளை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் எமது அமைப்பின் முல்லைத்தீவு சிறப்பு வேலைத்திட்ட இணைப்பாளர் பிருந்தா கடுமையாக அச்சுறுத்தப்பட்டு வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். இது போன்று எமது அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திருமதி செல்வம் நகுலேஸ்வரி மீதும் அச்சுறுத்தல் விடப்பட்டது. இவ்வாறானா தடைகளை தகர்த்தெறிந்து எமது போராட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் எந்த ஒரு அரசியல் வாதிகளையும் உள்வாங்கவில்லை. நாம் மிகவும் தூய்மையான போராட்டத்தை நடத்தினோம்

இந்த அச்சுறுத்தல் நடவடிக்கையை எமது அமைப்பில் இருந்து வெளியே துரத்தி விடப்பட்ட சுகந்தினியின் உறவு முறை பொலிஸ் அதிகாரி ஒருவரை’ செல்வராசா கஜேந்திரன் மற்றும் சுவிஸ் நாட்டில் இருக்கும் இலங்கை உளவுத்துறையிடம் புனர்வாழ்வு பெற்ற நிலையில் அரசன், அன்புமாறன், சந்தோசம் ஆகியோர் கையாண்டனர்.

மேற்படி விடயம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் திரு. சுபாஸிற்கு தெரியப்படுத்தினோம்.

ஆகஸ்ட் 30 திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பினால் கிளிநொச்சியிலும், திருகோணமலையிலும் போராட்டம் செய்வதற்கு உத்தியோகபூர்வமாக எமது அமைப்பு அறிவித்து இருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த செயற்பாட்டில் இருந்து உடனடியாக பின்வாங்க வேண்டும் என தெளிவாக விளங்கப்படுத்தினோம். அதற்கு அவர் கூறிய கருத்து இதை கஜேந்திரன் அண்ணன் தானாக மட்டும் செய்திருக்கமாட்டார் அவர் கட்சியின் முடிவாகத்தான் செய்திருப்பார் என அவர் கூறினார்.

அப்படி என்றால் கட்சியின் வேலைகளை கைவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு என்ற ஒன்று உங்கள் கட்சிக்குள் தேவையாக இருக்கின்றதா?

நீங்கள் ‘காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கண்ணீரில் குளிர் காய தேவையில்லை உடனடியாக ஒதுங்க வேண்டும். அவ்வாறு ஒதுங்கா விட்டால் வவுனியாவில் கூட்டமைப்பு எவ்வாறு துரத்தப்பட்டார்களோ அதை விட மோசமாக நீங்கள் துரத்தப்படுவீர்கள்.

எங்கள் அமைப்பில் இருந்து நான்கு மாதத்துக்கு முன்பு வெளியே கலைக்கப்பட்ட இருவரை திடீரென்று அழைத்து யாழ் சங்கிலியன் பூங்காவிலும் முல்லைத்தீவிலும் போராட்டம் செய்து தோல்வியடைந்துள்ளீர்கள்.

அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உங்கள் கட்சி பிரமுகர்களும் நிவாரணம் தரலாம் என ஏமாற்றி அழைக்கப்பட்ட அப்பாவி மக்கள் மாத்திரமே. நீங்கள் யாரை கேட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பு என்ற எமது பெயரைப் பயன்படுத்தி யாருடைய அனுமதியுடன் போராட்டம் செய்தீர்கள்?

உங்கள் கட்சி முகவர் வடமராட்சி கிழக்கில் இருந்து கிளிநொச்சி வரும் மக்களை வரவிடாமல் தடுப்பதற்கு முயற்சி செய்து படு தோல்வியடைந்தார்.

அங்கு ஒழுங்கு செய்த எமது தொடர்பாளருக்கு செல்வராசா கஜேந்திரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் ஒருவரும் கிளிநொச்சி போராட்டத்திற்கு போக வேண்டாம் சங்கிலியன் பூங்காவில் நடைபெறும் போராட்டத்திற்கு கட்டாயமாக வரும்படி கட்டளையிட்டார்.

இதனை எம்மால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும். எங்களுடைய போராட்டத்திற்கு போக வேண்டாம் என கூறுவதற்கு நீர் யார்?

நீரே மிகப்பெரும் குழப்பவாதி உமது கட்சிக்குள்ளே ஆயிரம் குழப்பங்களை ஏற்படுத்திகொண்டு இருக்கின்றீர் பிறகு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்புக்குள்ளும் குழப்புவதற்கு வந்திட்டீரா?

நீர் செய்த குற்றங்களுக்கு பொதுவெளியில் பகிரங்கமாக ஊடகங்கள் ஊடாக மன்னிப்பு கோர வேண்டும்.

நாம் ஒழுங்கு செய்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் போராட்டத்தை நீர் சிதைக்க முற்பட்டமைக்கு நாங்கள் உத்தியோக பூர்வமாக ஊடக ரீதியாக எங்கள் அமைப்பால் வெளிப்படையாக கிளிநொச்சியிலும், திருகோணமலையிலும் போராட்டத்திற்கு அறிவித்திருந்தோம். அறிவித்த போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்த முயன்றுள்ளீர் .

நீங்கள் தான் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவிலும் ,முல்லைத்தீவிலும் போராட்டாம் செய்தது.

இன்றோடு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பு என்ற வார்த்தை உங்கள் வாயில் வரக்கூடாது. அவ்வாறு ஒரு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பு என்ற பெயரில் எங்கயாவது ஒன்று இனி நடக்குமாக இருந்தால் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் எதிராக நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.

நாம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராடியிருக்கின்றோம், இலங்கை அரசுக்கு எதிராக போராடி இருக்கின்றோம், ஈ.பி.டீ.பி க்கு எதிராக போராடி இருக்கின்றோம், கூட்டமைப்புக்கு எதிராக போராடி இருக்கின்றோம் தப்பி இருக்கிறது நீங்கள் மட்டும்தான் இனி தப்ப முடியாது.

நீங்கள் செய்தது மகா தவறு இப்ப முழு பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்க முற்படுகிறீர்கள். அது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பால் அறிவிக்கப்பட்டது அதற்கு நாங்கள் போனநாங்கள் இதில் ஒன்றும் இல்லை நாங்கள் வழமையாக எல்லாப்போரட்டத்திற்கும் போறனாங்கள் என்று ஊடகங்களுக்கு அப்பட்டமான பொய் சொல்லுகின்றீர்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் பெயரில் போராட்டம் நடத்தினால் தான் உங்கள் கட்சி ஓடுமா? இல்லை என்றால் உங்கள் கட்சி படுத்திடுமா?

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை எந்தவொரு அரசியல் வாதிகளும் கட்சி அரசியல் ஆக்க வேண்டாம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி மக்கள் முன்னணி போராட்டம் செய்தது என்று நீங்கள் பொது வெளியில் கூற வேண்டும்.

எங்கள் அமைப்பை எட்டு மாவட்டங்களிலும் மிக பலமாக வைத்திருக்கின்றோம். சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இலங்கை சுதந்திரத்துக்கு எதிராக போராடி வருகின்றோம்

எமது போராட்டத்திற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள் நீங்களும் அதில் குளிர் காய வந்தநீங்கள் தான். இப்போது உங்கள் கட்சிக்குள் அவசரமாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பு தேவைப்படுகின்றதா?

நீங்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் உங்கள் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் கணிசமான மக்களை அழைத்து உங்களுக்கெதிராக நாங்கள் போராட்டம் நடத்த வேண்டி வரும். இன்றிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு என்ற பெயரை நீங்கள் உச்சரிக்க கூடாது. அவ்வாறு ஒரு போராட்டமோ ஒரு நபரோ இந்த அமைப்பு என்று வெளிக்கிட்டால் அதற்குரிய பொறுப்புக்கு உரியவர்கள் வேறு யாருமில்லை நீங்கள் மட்டுமே,

உடனடியாக நீங்கள் மூன்று நாளைக்குள் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் உங்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.