9ஆவது பாராளுமன்றில் ஒற்றையாட்சியை ஏற்று கோட்டா முன் பதவியேற்கும் முன்னணி எம்பிகள்..!

0

9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல்த்தவல தெரிவித்தார்.

இன்று காலை 9:30 இற்கு ஜனாதிபதியின் தலைமையில் 9 ஆவது பாராளுமன்றம் கூட்டப்படுவதுடன் சபாநாயகர், பிரதி சபாநாயகர், அரசாங்க தரப்பின் பிரதம கொரடா , சபை முதல்வர், பாராளுமன்ற தெரிவுக்குழு ஆகியவற்றுக்கான பதவிகளுக்கான தெரிவுகள் இடம் பெறவுள்ளது.

சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ சத்தியப் பிரமாணம் மற்றும் பதவிப் பிரமாணம் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் பாராளுமன்ற ஆவணத்தில் கைச்சாத்திடுவர் . இதன் பின்னர் பாராளுமன்றம் இடை நிறுத்தப்பட்டு மாலை 3 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும்.


இம்முறை மரியாதை வேட்டுக்கள், இராணுவ மரியாதைகள் என்பன இம்முறை இடம் பெறாது என்று பாராளுமன்ற பிரதி செயலாளர் தெரிவித்தார்.

இருப்பினும் கௌரவம் குறையாத வகையில் இம்முறை கலாச்சாரத்திற்கு முக்கிய இடம் வழங்கி பாராளுமன்றம் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகாமையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு இந்த கலாச்சார நிகழ்ச்சிகள் இடம் பெறும். ஜனாதிபதியினால் கொள்கை பிரகடன உரை இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நிகழ்த்தப்படவள்ளது.

இதேவேளை காலை சபையில் எதிர்கட்சி வலது புறத்திலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடது பக்கத்திலும் அமரவுள்ளனர்.


மாலையில் சிரேஷ்ட நிலைக்கு அமைவாக ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எமது மக்கள் சக்தி கட்சியின் சார்பில் 2 ஆசனங்கள் தொடர்ந்தும் வெற்றிடமாக காணப்படும் என்று தெரிவித்த அவர் இந்த உறுப்பினருக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

223 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல்த்தவல தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு தற்பொழுது சிறைச் சாலையில் உள்ள பிதேமலால் ஜயசேகரவின் ஆசன ஒதுக்கீடு தெடர்பாக அவரிடம் கேட்ட போது இவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருப்பதாகம் இவருக்கான ஆசன ஒதுக்கீடு குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட விருப்பதாகவும் அவர் கூறினார்.


கொவிட் 19 சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய சபையில் அனைவரும் அவசியம் முக கவசம் அணிவதும் 1 மீற்றர் இடைவெளியை முன்னெடுப்பதும் அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக அனைத்து உறுப்பினர்களும் செயற்படவேண்டும் என்றும் தெரிவிதத் அவர் குழுக்கள் ரீதியாக கலந்துரையாடலில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.


இதேவேளை இம்முறை ஒரு நாடு இரு தேசம் என்ற கோரிக்கையை முன் வைத்து பாராளுமன்றம் செல்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்கின்ற தமிழ் காங்கிரசின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரும் ஜனாதிபதி கோட்டபாய முன்னிலையில் ஒற்றையாட்சி, மற்றும் பிரிவினையையையோ, நாட்டின் இறைமைக்கு எதிராகவோ செயற்பட மாட்டோம் என சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.