கொக்கிளாயில் தொடர்ச்சியாக அபகரிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக காணிகள்..!

0

முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகை தந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒரு வாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலாளர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.


குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன,

அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்களாகிய நாங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் கொக்கிளாய் கிராமத்திலுள்ள விவசாயம் செய்யும் வயல் காணிகளையும், வாழ்வாதார குடியிருப்பு காணிகளையும், இலங்கை கனியவள நிறுவனம் அடாத்தாக அபகரிக்கிறது.

அதுபோல் இலங்கை கடற்படை எமது குடியிருப்பு காணிகளையும் சுவீகரித்து முகாம்களை அமைத்து வருகிறது.

மேலும் தென்னிலங்கையிலிருந்து தொழிலுக்காக கொக்கிளாய் வந்த சிங்களவர்கள் எமது குடியிருப்பு காணிகளையும், வாழ்வாதார காணிகளையும் அனுமதியற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் அடாத்தாக பிடித்து வீடுகளை அமைத்துகொண்டிருக்கிறார்கள்.


இதன் பின்னனியில் அரசாங்கமும், இராணுவமும் ,கடற்படையும் திரைமறைவில் எமக்கெதிராக செயற்படுகின்றனர். நாளாந்தம் எமது காணிகள் மென்மேலும் அபகரிப்புக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாம் ஊரை விட்டு அகதிகளாக வெளியேறிவிடும் பரிதாப நிலமை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்தக்காணிகள் எமது முன்னோர்களை அடுத்து எமது பெற்றோர்கள் வயல் செய்து வந்தார்கள் இப்போது நாங்கள் அந்த காணியில் பயிர் செய்து வருகிறோம். மீள்குடியேற்றத்தின் பின்பு அளந்து அடையாளப்படுத்தி தருவதாக மட்டும் கூறி எம்மில் சிலரிடம் கையொப்பம் பெற்றிருக்கின்றார்கள்.

கனியவள நிறுவனம் தொடர்ந்தும் அளவுக்கு அதிகமான எமது வாழ்வாதார நிலத்தையும் இன்னும் அத்துமீறி கையகப்படுத்துகிறார்கள். இதனால் ஊரைவிட்டு வெளியேற வேண்டிய பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எமக்கு அந்தக் காணியைத் தவிர வேறு காணிகள் இல்லை. நாங்கள் இதில் நல்ல விளைச்சல்களைப் பெற்று எமது பிள்ளைகளை வளர்த்து வருகிறோம். எமக்கு வாழ்வாதாரம் தரும் காணிகள் ஏதும் இல்லை. இந்த வயல் காணியை மட்டும் நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறோம்.

தொடர்ந்து பயிர் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது கிராம கமக்கார அமைப்பு, கிராம சேவையாளர், சமூக ஆர்வலர், பங்குத்தந்தைக்கும் அறியத் தந்திருந்தோம். அதற்கு எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. எமது குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கப்படவில்லை.


நாங்கள் மிகவும் வறிய மக்கள். எங்கள் நிலத்தை எங்களுக்கே தந்து விடுங்கள் நாங்கள் அந்த வயல் காணிகளை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எனவே தாங்கள் இதை கவனத்தில் கொண்டு இந்த காணிக்குரிய நடவடிக்கைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தங்களை மிகவும் மனம் வருந்தி கேட்பதோடு, தாங்கள் எமக்கு நல்ல முடிவைத் தருவீர்கள் என நம்புகின்றோம்.

எனவே தாங்கள் இதைத் கருத்தில் கொண்டு செயற்படுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஒரு வாரத்தினுள் எமக்கு ஒரு நல்ல முடிவினை தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனவும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.