முன்னணியின் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் முள்ளிவாய்க்காலில் உறுதிப் பிரமாணம்..!

0

9ஆவது பாராளுமன்றத்திற்கு யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், அதன் பொதுச் செயலாளரும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனும் முள்ளிவாய்க்காலில் உறுதிப் பிரமாணம் எடுக்கவுள்ளனர்.

இந்த உறுதிப்பிரமாண நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை காலை 9மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறவுள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அறிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் எமக்கான அங்கீகாரத்தினை அளித்துள்ளார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே எமது பிரதான இலக்காகவுள்ளது. தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் தமிழ்த் தேசம் அங்கீகாரிக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசத்தில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் இலங்கையை நிறுத்துவதே ஒரே வழியாகும்.


ஆகவே இனப் பிரச்சினை தீர்வு, நீதிக்கான பயணத்தில் நாம் கொள்கைப் பற்றுடன் தொடர்ந்தும் பயணிக்கவுள்ளோம். எமது விடுதலைப் பயணத்தில் உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், செல்நெறிக்கான உறுதிப் பிரணமானம் செய்யும் முகமாகவும் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது என்றார்.

இதேவேளை எதிர்வரும் வாரம் தெரிவு செய்யப்பட்டுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு உட்பட்டு இலங்கையின் இறைமைக்கு கட்டுப்பட்டு ஜனாதிபதி கோட்டபாய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.