நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்..!

0

நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.


இதன் கீழ், 200 மாணவர்களுக்குக் குறைவாகக் கொண்ட பாடசாலைகளின் நடவடிக்கைகள் வழமை போன்று ஐந்து நாட்களும் நடைபெறும்.

200 மாணவர்களுக்கு கூடுதலாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும்.

தரம் ஐந்து மாணவர்கள் ஐந்து தினங்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

தரம் ஒன்று முதல் தரம் நான்கு வரையான மாணவர்கள் வாரத்தில் சில நாட்கள் மாத்திரம் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும்.

திங்கட் கிழமை தரம் ஒன்று மாணவர்களும், செவ்வாய்க்கிழமை தரம் இரண்டு மாணவர்களும், புதன்கிழமை தரம் மூன்று மாணவர்களும் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும்.


தரம் நான்கு மாணவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும்.

இதேவேளை, தரம் ஆறு மாணவர்கள் திங்கட்கிழமையும், தரம் ஏழு மாணவர்கள் செவ்வாய்க்கிழமையும், தரம் எட்டு மாணவர்கள் புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தரம் ஒன்பது மாணவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும்.

தரம் பத்து முதல் தரம் 13 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்குச் செல்ல முடியும்.

ஒரு மீற்றர் இடைவெளியைப் பேண முடியுமாயின் சகல மாணவர்களும் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்குச் செல்லலாம்.


கொவிட்-19 நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தும் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்று கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.

இதேவேளை நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால், தொடர்ந்தும் சகலரும் சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்ற வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார்.

விசேடமாக சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.