தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாது..!

0

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்தவர்கள் தேர்தல் தினத்தில் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி வாக்களிப்பதற்காக செல்ல முடியும். இவ்வாறானோரின் எண்ணிக்கை 1700 க்கும் 1800க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,

மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இந்த பொதுத் தேர்தலின் ஊடாக, கொரோனா வைரஸ் பரவலை இல்லாது செய்வதுதான் எமது பிரதான இலக்காக இருக்கிறது.

விசேட நிலைமையின் கீழ் வாக்களிப்பதற்காக வருவோருக்கு மேலதிக கூடம் அமைக்கப் பட்டிருப்பதாக தெரிவித்த அவர், அனைத்து வாக்களிப்பு மத்திய நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எமது அதிகாரிகள் இதற்கான கடமைகளில் ஈடுபடவுள்ளார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவலானது சமூக மட்டத்தில் கிடையாது வைரஸ் தொற்றாளர் ஒருவர் இருந்தால்கூட, அவர் ஊடாக இன்னொருவருக்கு வைரஸ் தொற்று பரவாத வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.