பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி நகைகளை மோசடி செய்தவர் கைது..!

0

பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து ஏமாற்றி நகைகளை மோசடி செய்து வந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் யாழ். நாவாந்துறையைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து 15 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் தன்னிடம் இருந்து 45 பவுண் நகைகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார் என வட்டுக் கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.


தன்னைக் காதலிக்கிறார் என்று கூறிப் பழகிய சந்தேக நபர் திருமணம் செய்துகொள்வார் என்று உறுதியளித்திருந்தார் என்றும் முறைப்பாட்டாளரான பெண் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்வார் என்கிற நம்பிக்கையில் அவர் கேட்ட போதெல்லாம் தனது தங்கச் சங்கிலி, மோதிரம், தோடு, அம்மாவின் தாலி என்பவற்றை தான் வழங்கினார் என்றும் அதன் பெறுமதி 45 பவுண் என்றும் முறைப்பாட்டில் அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.

நகைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்ட பின்னர் தன்னுடனான தொடர்புகளைச் சந்தேக நபர் துண்டித்துக் கொண்டார் என்றும் குறித்த பெண் தெரிவித்தார்.


இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளமை தெரிய வந்தது. இந் நிலையில் கடந்த 31 ஆம் திகதி யாழ் பல்கலைக் கழகத்திற்கு அண்மையில் வைத்து சந்தேக நபரைப் பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் வேறொரு பெண்ணையும் காதலிப்பதாகக் கூறி நகைகளைப் பெற முயன்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளதன்படி எஞ்சிய 30 பவுண் நகைகளையும் சந்தேக நபரிடம் இருந்து மீட்பதற்கான முயற்சிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


இதேவேளை நேற்றைய தினம் நீதிமன்றில் சந்தேகநபரை முற்படுத்திய போது அவரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ்.மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ்ரங்கல மற்றும் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ வழிகாட்டலில் யாழ்.பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பதில் பொறுப்பதிகாரி கர்ஷ சமரகோன், உப பரிசோதகர் குலப்பிட்டிய, காவலர்கள் ரஞ்சித் கிங்ஸ்லி, அமில, கவியரசன், விஜயகாந்த், மரியசிறி, ரத்நாயக்க, குமார ஆகியோர் கொண்ட குழு சந்தேக நபரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.