தமிழீழ இசைக் கல்லூரியின் முன்னாள் பொறுப்பாளர் விடுதலை..!

0

யாழ்.பல்கலைக் கழகத்தின் நுண்கலைத் துறை விரிவுரையாளரும் முன்னாள் போராளியுமான நல்லை கண்ணதாஸ் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக இளைஞர் ஒருவரை கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றினால் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ் பல்கலைக் கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன், அந்தக் குற்றத்திலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.


கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் அவரை விடுவித்து விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.

இந்த மேன்முறையீட்டு வழக்கின் விளக்கம் சட்டத்தரணி சுமந்திரனால் எழுத்தில் வழங்கப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் 13ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு கண்ணதாசனால் மேன்முறையீடு செய்யப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் வவுனியா மேல் நீதிமன்றினால் வழங்கப்படுள்ள தீர்ப்பினை நியாயப்படுத்த முடியவில்லை என்றும் அதனால் மீண்டும் விசாரணை வேண்டும் என அன்றைய தினம் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் குமார் ரட்ணம் விண்ணப்பத்தை முன் வைத்தார்.


ஏற்கனவே இடம்பெற்ற விசாரணையை நியாப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டுமே அன்றி மீள் விசாரணைக்கு இணங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்திருந்தார்.

அன்றைய தினம் குற்றவாளியும் மன்றுக்கு அழைத்து வரப் பட்டிருக்கவில்லை. அதனால் குற்றம் சாட்டப்பட்டவரையும் அழைத்து வருமாறும் மீள் விசாரணையா அல்லது விடுதலையா என்பதற்கான கட்டளையை வழங்குவதாக வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, பிரியங்க பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட அமர்வு குறித்த கட்டளையை வழங்கியது.


கண்ணதாசன் குற்றவாளியாக காணப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்து கட்டளை வழங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் முன்னாள் பொறுப்பாளரும், யாழ் பல்கலைக் கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு யூலை மாதம் 26ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.


இதேவேளை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த அவர் மிருதங்கக் கலையின் நுணுக்கங்கள் குறித்த “பஞ்ச நடையில் தனியாவர்த்தனம்” என்ற நூலை சிறையிலிருந்தே எழுதி அதனை அவருடைய குடும்பத்தார் யாழில் வெளியிட்டு வைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.