தேர்தலின் பின்னர் நிம்மதியாக வாழ முடியுமா என்ற நிலையில் முஸ்லீம்கள் – அமீரலி

0

முஸ்லிம்களின் குரலான தலைவர் றிசாட் பதியுதினை கைது செய்து கூண்டில் அடைப்போமாக இருந்தால் பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப்படுத்தி, உற்சாகப்படுத்தி, அதிக வாக்குகளை பெற முடியும் என்கின்ற அடிப்படையில் கைது செய்வதற்கான வேலைத் திட்டங்களை அவசரமாக மேற்கொண்டு வருகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை செம்மண்னோடை வட்டாரக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று இரவு செம்மண்னோடையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அகில இங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதினை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நாட்டிலுள்ள பௌத்த மக்களுக்கு செய்தி சொல்ல வேண்டியுள்ளது.

முஸ்லிம் மக்களை அடிமைப்படுத்தி, கொச்சைப்படுத்தி, முஸ்லிம் மக்களின் அவலங்களை நாங்கள் கண்டு கொள்ளாமல் கொத்தடிமைகளாக நடாத்தப் போகின்றோம் என்ற செய்தியை சிங்கள பெரும்பான்மை சமூகத்திற்கு சொல்வதன் மூலம் அதிகமான ஆசனங்களை பெற முடியும் என்ற நம்பிக்கையின் பெயரில் தலைவர் றிசாட் பதியுதினை கைது செய்து சிங்கள சமூகத்திற்கு பாடம் சொல்ல போகின்றார்கள்.


நாங்கள் முஸ்லிம் தலைவர்களை கைது செய்யப் போகின்றோம். உங்களது சிந்தனைகளுக்கு மதிப்பளிக்கின்றோம், உங்களை சந்தோசப் படுத்துகின்றோம் என்று சிங்கள சமூகத்திற்கு கோட்டாபய அரசாங்கம் பதில் சொல்ல காத்துக் கொண்டிருக்கின்றது.

சிங்கள சமூகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மின்சார கட்டணம் செலுத்த முடியாமல், விலைவாசிகள் உயர்ந்த காரணத்தினால் நாட்டில் மாற்றம் வரவேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் கொதித்தெழும் வேளையில் இதற்கு பதிலாக என்ன செய்ய முடியும் என்று ஆலோசனை செய்கின்றார்கள்.


ஆலோசனையின் பெயரில் பெற்றுக் கொண்ட முடிவு இனவாதத்தின் மூலம் மீண்டும் ஏதாவது செய்தால் மாத்திரம் பெரும்பான்மை சமூகத்தின் வாக்கினை பெற முடியும் என்று பார்க்கின்றார்கள். இதற்காகவே முஸ்லிம்களின் குரலான தலைவர் றிசாட் பதியுதினை கைது செய்து கூண்டில் அடைப்போமாக இருந்தால் பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திபடுத்தி, உற்சாகப்படுத்தி, அதிக வாக்குகளை பெற முடியும் என்கின்ற அடிப்படையில் கைது செய்வதற்கான வேலைத் திட்டங்களை அவசரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் எமது சமூகத்தினர் நிம்மதியாக வாழ முடியுமா, அடிப்படை உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியுமா, ஒரு நாடு ஒரு சட்டம், ஒரு தேசம் ஒரு சட்டம் என்ற கொள்கையை பிரகடனப்படுத்தி விட்டால் எமது நிலவரம் என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டும்.

இவர்கள் 151 ஆசனங்கள் எடுப்பார்களாக இருந்தால் நமது நிலைமையை சற்று யோசித்து பாருங்கள். இவ்வாறான விடயங்கள் இந்த நாட்டில் நிகழுமாக இருந்தால் எங்களது பள்ளிவாசல்கள், மதரசாக்கள் என்பவற்றின் நிலவரம் என்ன என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.


கல்குடாவில் ஒரு மதரசா, ஒரு பள்ளிவாசல் மாத்திரம் இருக்க வேண்டும் என்று ஒரே நேரத்தில் 151 கைகளும் உயர்த்தப்படுமாக இருந்தால் அதுதான் சட்டம் என்பதை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களின் குரலாக முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது சண்டை பிடிக்கும் குரலாக பக்குவமாக பேசுவதற்கு கல்குடா சமூகம் எனக்கு தந்துள்ளது. உங்களது அதிகாரம் எனக்கு இருக்கும் வரை குரல் ஓயாது. அந்த ஆளுமையை யாராலும் அழித்து விட முடியாது.
இது கோட்டபாய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, பசீல் ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ஷ ஆகியோரால் அழிக்க கூடிய ஆளுமையல்ல. இது இறைவனுக்கும், நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் பயந்த ஆளுமை.

தற்போது ஹிஸ்புல்லா ஒப்பந்தத்தினை பெற்றுக் கொண்டு இங்கு தனது முகவர்கள் ஊடாக மூன்னூறு தேர்தல் அட்டைகளை விலை கொடுத்து வாங்க முடியும் என்று வந்துள்ளார்.


அத்தோடு ஹாபிஸ் நசீட் அஹமட் கரையோரப் பிரதேசத்திலுள்ள மக்களின் வாக்கு அட்டைகளை வாங்கி வாக்களிக்காமல் வைக்கின்ற யுக்தியை கையாளப் பார்கின்றார்கள்.

அவர்கள் அவர்களுடைய பிரதேசத்தில் என்ன வேணும் என்றாலும் செய்யட்டும். ஏறாவூர் மற்றும் காத்தான்குடி மக்கள் இவ்வாறான அநியாயங்களுக்கு சோரம் போக வேண்டாம். என்றொரு நாள் நீங்கள் செய்த பிழைக்காக வருந்த வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நிலையில் ரிஷாட், அமீரலி, மஸ்தான் உள்ளிட்டோருக்கு வாக்களித்து தமிழ் மக்கள் பெறப் போகும் நன்மை என்ன? என ஒவ்வொரு தமிழரும் சிந்திக்க வேண்டும்.