ஏப்ரல் குண்டு வெடிப்பு விவகாரம்; ரிஷாட்டை நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு..!

0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் நாளை காலை (20) 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர், பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூல கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையிலும், அதற்கு முரணான வகையில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ரிஷாட் தரப்பு தெரிவித்துள்ளது.


ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட் தொடர்பிலான விவகாரம் ஒன்று குறித்தே, வாக்கு மூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட், கட்டாயம் ஆஜராக வேண்டுமென, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) இந்த அழைப்பாணையை விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலின் பின்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தமது தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதற்காக, அம்பாறைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே, இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை மத்தியில் கோட்டாபாயவின் ஆட்சி உள்ள நிலையிலும், ஏப்ரல் குண்டு வெடிப்பு, சதோச விவகாரம் என்பன கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தனது இனம் சார்ந்த விடயங்களையே கவனிக்க முடியாத இக்கட்டான நிலையில் ரிஷாட் உள்ள நிலையில்,

தமிழர் நலன்சார்ந்த விடயங்களையும், வேலை வாய்ப்புக்களையும், அபிவிருத்தி நடவடிக்கைகளையும் எவ்வாறு மேற்கொள்ள முடியும்?


அதேவேளை கடந்த காலம் போல் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ள ரிஷாட்டால் அரசின் தடையை மீறி எவ்வாறு வெளிநாட்டு நிதிகளைக் கொண்டுவர முடியும்? மாறாக ஆதரவு வழங்குபவர்கள் அரசின் விசேட கண்காணிப்புக்குள் உள்வாங்கப்பட்டு அரசியல் பழிவாங்கல் இடம் பெறக் கூடும்

ஆக தமிழ் மக்களை முட்டாளாக்கி வாக்குப் பெறும் யுக்தியையே முன்னாள் அமைச்சர் கைக்கொள்வதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.