வவுனியா ஈச்சங்குள இளைஞர்கள் மீது பொலிசார் தாக்குதல்; வீதியை மறித்து போராட்டம்..!

0

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இளைஞர்கள் இருவரை திடீரென தாக்கியதால் அப்பகுதியில் குழப்பமான நிலை ஏற்பட்டிருந்தது.

இன்று மாலை 05 மணியளவில் ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக குறித்த சம்பவம் இடம் பெற்றது.


சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கருத்து தெரிவிக்கும் போது,

இன்றைய தினம் மாலை குறித்த பகுதியில் நின்றிருந்த சமயம் அவ்வீதியால் வருகை தந்த ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்மை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்து விட்டுச் சென்றார்.

பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் வருகை தந்த அவர் எந்த குற்றமும் செய்யாத எம்மை திடீர் என்று தாக்கினாரெனத் தெரிவித்தனர்.


இதனால் அப்பகுதியில் ஒன்று திரண்ட இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியின் குறுக்காக தடைகளை ஏற்படுத்தியதுடன், வீதியை வழிமறித்து தமக்குரிய நீதியை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.


இந்நிலையில் தாக்குதலிற்குள்ளான இளைஞர்களை நாளைய தினம் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு சென்று முறையிடுமாறும், தற்போது போராட்டத்தை கைவிடுமாறும் பொலிஸ் அத்தியட்சகரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கு அமைய போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

குறித்த போராட்டம் காரணமாக தாண்டிகுளம் ஊடாக பாலம்பிட்டி செல்லும் பிரதான பாதையூடான போக்குவரத்து இரண்டு மணி நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.