துருக்கியின் இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பு இலங்கையில் செயற்பாட்டில்..!

0

துருக்கி நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான “ஃபோடோ” அமைப்பு இலங்கை உட்பட 160 நாடுகளில் இயங்கி வருவதாக இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் ஆர்.தெமன் ஷேகிர்ஜியோலு தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள், வர்த்தகங்கள், அரசசார்ப்றற நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஊடாக ஃபோடோ அமைப்பு தனது வலையமைப்பை நிறுவியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.


துருக்கியில் நடைபெற்ற இராணுவ சதிப் புரட்சி தோற்கடிக்கப்பட்ட நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் துருக்கி தூதுவர் இதனை கூறியுள்ளார்.

ஃபோடோ அமைப்பு 1970 ஆம் ஆண்டுகளில் தொண்டு நிறுவனமாக துருக்கியில் தனது பணிகளை ஆரம்பித்ததுடன் பின்னர் உலகம் முழுவதும் பாடசாலைகளை நிறுவியது.


போடோ அமைப்பு வர்த்தக கொடுக்கல், வாங்கல்கள் மற்றும் அரச கேள்வி மனு கோரல்கள் தொடர்பான செயற்பாடுகளில் தனது தொடர்புகளை ஆரம்பித்த பின்னர், பணச் சலவை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஏனைய நிதி ரீதியான குற்றங்களை வர்த்தமாகிக் கொண்டது.

இதனையடுத்து அந்த அமைப்பு சீர்குலைப்பு நடவடிக்கைகளுக்கு இந்த நிதியை பயன்படுத்தி வருகிறது. நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களிடம் பெறும் அன்பளிப்புகளை பொதுமக்கள் மத்தியில் நிலைப்பாடுகளை உருவாக்க ஊடக நிறுவனங்களை நிறுவியுள்ளது.


துருக்கியில் ஃபோடோ அமைப்பு செயலிழந்துள்ளது. எனினும் வேறு நாடுகளில் தமது அமைப்பை கொண்டு நடத்த அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

உலக பொருளாதார மற்றும் உலக அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு ஃபோடோ அமைப்புக்கு உள்ளதால், அந்த அமைப்பு இயங்கும் நாடுகளில் அது நேரடியாக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.


ஃபோடோ பயங்கரவாத அமைப்பு செயற்படும் விதம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் உள்ள அந்த அமைப்பின் இணை நிறுவனங்கள் மற்றும் அவற்றில் செயற்படும் நபர்கள் தொடர்பான சகல தகவல்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி தூதுவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.