பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல் வெளியாகியது..!

0

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்தால், பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.


அதன் பின்னர் கொரோனா வைரஸின் வீரியம் நாட்டில் குறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 6ஆம் திகதி முதல் சுகாதார வழிகாட்டல்களுடன் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது நாட்டில் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.


கடந்த 3 நாட்களில் மாத்திரம் 400இற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதனையடுத்து, நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் அவ்வாறு எந்த நடவடிக்கையும் தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லையென அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


எவ்வாறிருப்பினும் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்தால், பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தற்போது அறிவித்துள்ளது.

எனவே பாடசாலைகள் வழமை போன்று சுகாதார நடமுறைகளுடன் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.