முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாற்றத்திற்காக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்கு மீன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்ணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
கடந்த காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் எம் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகின்றீர்கள் என்பதனை நான் அறிவேன்.
கடந்த பாராளுமன்ற பொது தேர்தல்களில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ததற்கு மிகவும் நன்றியுடையவனாக இருக்கின்றேன்.
அதேபோல் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் உங்களுடைய பூரண ஒத்துழைப்பை நாடி நிற்கின்றேன்.
உங்களுடைய ஒத்துழைப்பின்றி மாவட்டத்தின் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. உண்மையில் அபிவிருத்தியின் நாயகர்கள் நீங்களே.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கடந்த காலத்தில் உங்களால் வழங்கப்பட்ட ஆதரவினைப் போன்று, நடைபெறவுள்ள தேர்தலிலும் எனக்கு வாக்களிப்பதன் ஊடாக கடந்த காலத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியமை போன்று தொடர்ந்தும் பணியாற்றுவேன்.
உங்களது ஆலோசனை மற்றும் ஆதரவுடன் எனது உறுதியான அரசியல் பணிகளும் அபிவிருத்தி பணிகளும் என்றும் தொடரும், உங்களது கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் தொடர்ந்தும் நிறைவேற்ற உறுதி பூண்டு உழைப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இடமாற்றப் பிரச்சினைகள், சம்பள முரண்பாடுகள், காணியற்ற அரச ஊழியர்களுக்கு குடியிருப்புக்கான காணிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற இன்னோரன்ன தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் என்னையும் வெற்றி பெறச் செய்வதற்கு மீன் சின்னத்துக்கு வாக்களித்து எங்கள் கரங்களை பலப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.