பல தசாப்பதங்களின் பின்னர் எழுச்சியுடன் சிட்னியில் நினைவு கூரப்பட்ட கரும்புலிகள் நாள்..!

0

சிட்னியில் தமிழீழக் கரும்புலிகள் நாள் யூலை 5 2020 அன்று எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் தடை வரும் என்ற அச்சம் காரணமாக நீண்ட காலமாக கரும்புலிகள் தினம் சிட்னியில் நினைவு கூரப்படவில்லை. ஆயினும் இவ்வருடம் தலைவரின் பிள்ளைகள் அமைப்பினரின் ஒழுங்குபடுத்தலில் 346 கரும்புலிகளின் திருவுருவப் படங்கள் மண்டபத்தில் வைக்கப்பட்டு இந்நிகழ்வு எழுச்சியாக நினைவு கூரப்பட்டது.

05-07-2020 அன்று மாலை 4.30 மணிக்கு பென்டில் கில்லில் அமைந்துள்ள யாழ். மண்டபத்தில் மாவீரர் லெப்.சாள்கிள்ளை அவர்களின் சகோதரரும் கடற்புலிகளின் பயிற்சி ஆசிரியருமான வேதராச தினேஷ் அவர்கள் பொதுச் சுடர் ஏற்ற நினைவு வணக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அவுஸ்திரேலியா பூர்விக மக்களின் கொடியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவரின் பிள்ளைகளின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமாகிய பேரின்பராசா முகுந்தன் அவர்கள் ஏற்ற, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை நியுசவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழர்களின் நண்பருமான Hugh McDermott அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவரின் பிள்ளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினருமான காளிராசா நவேந்திரா அவர்களும் ஏற்றி வைத்தனர்.

முதல் கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் சகோதரர் ஐங்கரனும் முதல் பெண் கரும்புலி கப்டன் அங்கயற் கண்ணியின் திருவுருவப் படத்திற்கு கப்டன் யோகனின் துணைவியாரும் தலைவரின் பிள்ளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினருமான கலா அவர்களும் ஈகைச் சுடர்களை ஏற்றி வைக்க சம நேரத்தில் அனைத்து கரும்புலிகளின் திருவுருவப்படங்களும் பொதுமக்கள் ஈகைச் சுடர்களை ஏற்றி வைத்தனர்.

முல்லை ஓசை அணியின் ஒருங்கிணைப்பாளர் செல்வராசா தனுசாந் அவர்கள் மலர் வணக்கத்தை ஆரம்பித்து வைக்க பொதுமக்கள் தேசத்தின் புயல்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வைத் தொகுத்து வழங்கிய தமிழ்நிலா கரும்புலிகளைப் பற்றிய கவிதை ஒன்றை வழங்கினார்.

நியுசவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் Hugh McDermott உரை, தமிழீழ பாடகர் ரமேசன் அவர்களின் கரும்புலிகள் பாடல், வன்சிகா வர்சினி வெற்றிச்செல்வன் அவர்களின் கவிதை ஆகியன இடம் பெற்றன.

தலைவரின் பிள்ளைகளின் கரும்புலிகள் நாள் அறிக்கையினை மூத்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரும் தலைவரின் பிள்ளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினருமான தர்மலிங்கம் யோகராசா அவர்கள் வாசித்தார். தலைவரின் பிள்ளைகளின் கோசப் பாடலைத் தொடர்ந்து கொடிகள் இறக்கப்பட கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

இந்நிகழ்வுக்கான மண்டப வடிவமைப்பை முல்லை ஓசை அணியினர் மிகவும் எழுச்சிக் கோலமாக மாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.