தாயக விடுதலைக்காக இறக்கத் துணிந்த கரும்புலிகள் தினம் இன்றாகும்..!

0

தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் கரும்புலிகள் தினம் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் முதலாவது தற்கொலைக் தாக்குதல் இடம் பெற்ற 1987 யூலை 5 ஆம் திகதி கரும்புலிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு விடுதலைப் புலிகளால் அனுஷ்டிக்கப்பட்டது.


தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ் குடாநாட்டை கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஓப்ரேஷன் லிப்ரேஷன் இராணுவ நடவடிக்கை காரணமாக புலிகள் இராணுவ ரீதியான சவால்களை எதிர்கொண்ட வேளையில் அதனை முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினால் தற்கொலை தாக்குதல் தந்திரோபாயம் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில் தற்கொலைதாரிகளாகச் சென்று தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ள திலீபன் உட்பட புலிகளின் மூத்த தளபதிகள் பலர் போட்டியிட்ட போதிலும் கப்டன் மில்லர் என்ற போராளிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்கிறது புலிகளின் பதிவொன்று கூறுகிறது.


1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5ஆம் திகதி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டு குடாநாட்டை முற்றுகை இடுவதற்கான அடுத்தக்கட்ட தயார்படுத்தல்களை மேற்கொண்டு வந்த இலங்கை இராணுவத்தினர் மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தில் சென்று கப்டன் மில்லரினால் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் மூலம் இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டதாக புலிகள் அறிவித்தனர். இதனையடுத்து குடாநாட்டை கைப்பற்றும் திட்டமும் இராணுவத்தினரால் கைவிடப்பட்டது.

தொடர்ந்து வந்த காலங்களில் தற்கொலை தாக்குதல் என்பது தங்களைப் பொறுத்தவரையில் அதியுச்ச போர் உபாயமாக கைக்கொள்ளப் படுவதாக புலிகள் தெரிவித்தனர்.


தற்கொலை போராளிகளின் உயிர் தியாகத்தை கௌரவிக்கும் முகமாக முதலாவது தற்கொலை போராளியான கப்டன் மில்லர் தாக்குதல் நடத்திய யூலை 5ஆம் திகதி தேசிய கரும்புலிகள் தினமாக பிரகடனப்படுத்துவதாக புலிகள் தெரிவித்தனர்.

குறித்த தினம் புலிகள் செயற்பட்ட காலத்தில் அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

குறைந்த இழப்புக்களுடன் எதிரிகளுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களிலும் படையணிகளால் நுழைய முடியாத கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை தகர்ப்பதற்கும் தற்கொலை தாக்குதல் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.


அந்தவகையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ஆயுதங்களை மௌனிப்பதாக புலிகள் அறிவிக்கும் வரை ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தற்கொலை போராளிகளாக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கி விடுதலைப் போருக்கு உரம் சேர்த்தனர்.

எனினும் இறுதியாக 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் வெளியிட்ட உத்தியோகப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் 322 போராளிகள் தற்கொலை தாக்குதல்களை நடத்தி உயிர்களை தியாகம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து கரும்புலி மறவர்களுக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.