பயங்கரவாதி ஷர்கானின் முகாமை கண்டு பிடித்த சிஐடி அதிகாரியைக் கொலை செய்யத் திட்டம்..!

0

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான பயங்கரவாதி மொஹம்மட் ஸஹ்ரானின் புத்தளம், வண்ணாத்துவில்லு பயிற்சி முகாமை கண்டுபிடித்த, சிஐடியின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்கவை கொலை செய்ய திட்டம் தீட்டியமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி. கைது செய்துள்ள சந்தேக நபர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்றை ஆராய்ந்த போது, அது சார்ந்த விசாரணைகளின் போதே இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


இந்த விடயம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் கவனத்துக்கு இன்று (10) கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்நிலையில், இது குறித்து ஒரு வாரத்துக்குள் பூரண விசாரணை செய்து பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்கவின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஆணைக் குழு உத்தரவிட்டது.


வண்ணாத்துவில்லு பயிற்சி முகாமைக் கண்டுபிடிக்க, முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் இணைப்புச் செயலர் ஒருவர், தகவல் வழங்கிய நிலையில், இது தொடர்பில் தகவல்களை பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்க வெளிப்படுத்தியமை தெரிந்ததே.