நகரசபையை முட்டாளாக்கி இரு மாதம் சம்பளம் பெற்ற ஐதேக பிரதேச சபை உறுப்பினர்..!

0

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் சுயேற்சைக் குழு வேட்பாளராக போட்டியிடும் வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் நகரசபை உறுப்புறுமையில் இருந்து விடுமுறை பெறாமல் இருந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேர்தல் விதிமுறைகளின் பிரகாரம் உள்ளுராட்சி மன்ற உறுப்பினராகவோ அல்லது அரச உத்தியோகத்தராக உள்ள ஒருவர் தேர்தலில் பங்கேற்பதாக இருந்தால் குறித்த அரச நிறுவனத்தின் தலைமைக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கி விடுமுறை பெற்றிருக்க வேண்டும்.


எனினும் வவுனியா நகரசபையின் உறுப்பினராகவும் வவுனியா பிரதேச செயலகத்தின் சமுர்த்தி உத்தியோகத்தராகவும் கடமையாற்றும் அப்துல் லரிப் என்பவர் தான் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு விடுமுறைக் கோரிக்கையை வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பாக வழங்கி அனுமதி பெற்றிருந்த போதிலும் மக்கள் பிரதிநிதியாக கடமையாற்றும் வவுனியா நகரசபை பிரதிநிதித்துவத்திற்கு விடுமுறை வழங்கவில்லை.


இவ்விடயம் இன்று வவுனியாவில் பேசுபொருளாக காணப்படும் நிலையில் இவ்விடயம் தொடர்பாக குறித்த நகரசபை உறுப்பினர் தான் கடமையாற்றும் அரச பதவியான சமுர்த்தி உத்தியோகத்தர் பதிவியில் இருந்து சட்டபூர்வமாக விடுமுறை பெற்றுள்ளதாகவும் நகரசபை உறுப்பினர் பதவியிக்கு விடுமுறை விண்ணப்பம் அளிக்கவில்லை எனவும் ஒத்துக் கொண்டதுடன் இரு மாதங்களுக்கான நகரசபை உறுப்பினருக்கான கொடுப்பனவை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதேவேளை குறித்த இரு மாத கொடுப்பனவையும் நகரசபைக்கு மீள செலுத்த தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளரிடம் தேர்தலில் போட்டியிடும் வேட்பளரான அப்துல் லரிப் தனது சமுர்த்தி உத்தியோகத்தர் பதவியில் இருந்து முறையாக விடுமுறை பெற்றுள்ளாரா என கேட்டபோது, தமக்கு விடுமுறைக்கான விண்ணப்பத்தினை அவர் தந்ததாகவும் அதனை தலைமையகத்திற்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.


இதேவேளை நகரசபை தலைவர் இ. கௌதமனிடம் குறித்த நகரசபை உறுப்பனர் நகரசபையின் உறுப்பினர் தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதனால் நகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து முறையாக விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தாரா என கேட்ட போது, அவர் அவ்வாறு எந்த கோரிக்கையையும் முன் வைக்கவில்லை எனவும் அவரது செயற்பாடுகள் சட்டத்திற்கு முரணாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சுயேற்சைக்குழுவில் போட்டியிடும் அப்துல் லரிப் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் குறித்த நகரசபை உறுப்பினர் உள்ளுராட்சி மன்றத்திற்கு முறையாக விடுமுறை பெறாது ஏமாற்றியிருந்ததுடன் தனது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அனுமதியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.