ராஜபக்ச அரசு மீண்டும் கவிழ்வது உறுதி; சஜித் அணி திட்ட வட்டம்..!

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச அரசு கவிழ்வது நிச்சயிக்கப்பட்டு விட்டது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறுவது உறுதி என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகததில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,

ராஜபக்ச அரசால் மக்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்க முடியவில்லை. கொரோனா வைரஸ் பரவலை இதற்குக் காரணமாக காட்டினாலும் , வைரஸ் பரவலுக்கு முன்பிருந்தே அரசு எவ்வித பயன் தரும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை.

இதேவேளை, பஸில் ராஜபக்ச ஊடக சந்திப்பொன்றின் போது தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக தனியார்துறை உரிமையாளர்களுக்குப் போதிய நிதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதனால் தனியார் துறை ஊழியர்கள், நிறுவனங்கள் நிதியைப் பெற்றுக் கொண்டு தங்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை என்று தவறான எண்ணைத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு யாருக்குமே நிதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை. பஸில் ஏன் இவ்வாறு போலிப் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றார்?

இதேவேளை, மே மாத அரச ஊழியர்களின் ஊதியத்தை நிறுத்தி வைப்பதனால் 100 பில்லியன் ரூபாவை சேர்த்து வைக்க முடியும் என்று ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.


இவ்வாறு எவ்வளவு நிதியை தற்போது சேர்த்து வைத்துள்ளார்கள் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்.

தற்போதைய அரசு ஆட்சியைப் பொறுப்பேற்ற போது நெற்களஞ்சிய சாலையில் ஒரு நெல்மணிகூட களஞ்சியப்படுத்தப் பட்டிருக்கவில்லை என்று அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார். இது உண்மைக்குப் புறம்பான தகவலாகும்.

நாங்கள் 42 மெட்ரிக் டொன் நெல்லைக் களஞ்சியப் படுத்தியிருந்தோம். அது தொடர்பில் ஆதாரங்களும்’ எம்மிடம் இருக்கின்றன. அதேவேளை நுகர்வோர் அதிகார சபையிடமும் அறிந்து கொள்ள முடியும்.


இந்த நெல்லுக்கு என்ன நடந்தது? அது எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பில் அவர்கள் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு உரிய முறையில் முகாமைத்தவம் செய்ய முடியவில்லை என்றால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதனை விடுத்து கடந்த அரசையும் எதிர்க் கட்சியையும் குறைகூறி வருவது நியாயமற்ற செயற்பாடாகும்; இந்நிலையில் இந்த ஆட்சி எதிர்வரும் தேர்தலுடன் கவிழ்வது உறுதி என்றார்.