சுகாதார நடைமுறையை பின்பற்றாது வவுனியா அழைத்து வரப்பட்ட கடற்படையினர்..!

0

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களை தனிமைப்படுத்துவதற்காக வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

இன்று (22) இரவு 7 மணியளவில் 17 பேரூந்துகளில் புகையிரத நிலைய வீதி ஊடாக கடற்படையினர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.


வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இதற்கமைவாக 17 பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட கடற்படையினர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப் படவுள்ளனர்.


இதேவேளை குறித்த கடற்படையினர் சுகாதார நடைமுறையை பின்பற்றாது பேரூந்தின் கண்ணாடிகளை திறந்தபடியும், முகக் கவசம் அணியாமலும் பயணித்துள்ளனர்.

இதேவேளை, கடற்படையினரை அழைத்து வந்த பேரூந்துகள் வவுனியா, குருமன்காடு பகுதியில் வீதியின் நடுவே நிறுத்தப்பட்டமையால் சிறிது நேரம் அவ் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வீதிப் போக்குவரத்துப் பொலிசார் வருகை தந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்பாடுத்த முனைந்ததையடுத்து கடற்படையினர் அங்கிருந்து சென்றிருந்தனர்.


குறித்த பயணத்தின் போது நபர் ஒருவர் ஜன்னலூடாக தவறுதலாகவோ, வேண்டுமென்றோ உமிழ்நீரை உமிழ்ந்திருந்தாலோ அல்லது தும்மியிருந்தாலோ கொரோனா பரவும் சாத்தியம் உள்ளது.

எனவே இவ்விடயத்தில் சகல தரப்பினரும் கரிசனை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.