இராணுவ போர் வெற்றி விழா புறக்கணிப்பு; பொன்சேகாவுக்கு கோட்டா கொடுத்த பரிசு..!

0

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னாள் இராணுவத் தளபதியும், எம்.பியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியிருந்த காணி ஒன்றை தற்போதைய அரசாங்கம் மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.

கொழும்பு நாரஹேண்பிட்டி – கிரிமண்டல மாவத்தையில் உள்ள இந்த காணியை முன்னாள் இராணுவத் தளபதியின் பாதுகாப்புப் பிரிவினர் தங்குவதற்காகப் பயன்படுத்தினர்.


இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அப்போது மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க சமர்பித்த நிலையில் அதற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த காணி, காணி அபிவிருத்தி அதிகார சபையினால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதோடு அதற்கான கடிதமும் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.


போர் வெற்றி கொண்டாட்ட நிகழ்வாகிய கடந்த 11ஆம் திகதி இந்தக் கடிதம் முன்னாள் இராணுவத் தளபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை குறித்த விழாவிற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்ட போதும், குறித்த நிகழ்வை பொன்சேகா புறக்கணித்ததுடன் நான் பீல்ட்மார்ஷல் பதவியில் உள்ளவன் ஒருபோதும் லெப் கேணலாக இருந்தவருக்கு சலூற் அடிக்க தயாரில்லை எனத் தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.