மட்டக்களப்பு தமிழ் பிரதேசத்தில் குழு மோதலால் இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்..!

0

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி தமிழ் பிரதேசத்தில் இடம் பெற்ற கோஷ்டி மோதலின் போது 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு (19) கூரிய ஆயுதத்தினால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மற்றுமொரு நபர் கத்தியினால் வெட்டப்பட்டு காயமடைந்துள்ளார். நேற்றிரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இரண்டு பிள்ளைகளின் தந்தையான விஜயபாலன் நிரோஜன் என்பவரே கொலை செய்யப்பட்டவரென அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடந்த வாரம் ஆரம்பமான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதாலேயே கொலையில் முடிவடைந்திருப்பாதாக தெரிவிக்கப்படுகிறது.


மீன் பிடித்தொழிலாளியான இவர் தனது நண்பரது வீட்டிற்குச் சென்று திரும்பும் போது கோஷ்டியொன்றினால் வழிமறிக்கப்பட்டு மிளகாய்த்தூள் வீசப்பட்ட பின்னர் கூரிய கம்பியினால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகவும் குத்தப்பட்ட கம்பி கொலையுண்டவரின் உடலோடு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை இருகோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலின்போது ஒருவர் குத்திக் கொல்லப் பட்டதாகவும் மற்றையவர் வெட்டுக் காயங்களுக்கு உட்பட்டதாகவும் இருவேறு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கொல்லப்பட்டவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்தவரும் அதே வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு இன்று (20/05)காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் சிலர் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றனர். ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.