லங்கா IOC நிறுவன எரிபொருள் நிலையங்களை புறக்கணிக்குமாறு பெரமுன கோரிக்கை..!

0

எரிபொருள் விலையை அதிகரிப்பதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்த நிலையில் அந்த நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களை புறக்கணிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.


உலகளவில் எண்ணெய் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்த போதிலும் விலைகளை அதிகரிப்பதில் லங்கா IOC நிறுவனம் பிடிவாதமாக இருப்பதாக கூறிய அவர், எனவே அரசாங்கம் முதலில் குறித்த நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்களை தவிர்க்க மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


மேலும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலைப் புறக்கணித்த காரணத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது அரசாங்கத்திற்கு வாக்களித்த 6.9 மில்லியன் மக்களும் லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


அத்துடன் லங்கா IOC நிறுவனத்தை ஒரு தனியார் நிறுவனமாக செயற்பட அனுமதித்த ஐக்கிய தேசியக் கட்சி மீதும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை அமுலுக்கு வரும் வகையில் லங்கா IOC நிறுவனம், பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலையை லீற்றருக்கு 5 ரூபாய் இனால் அதிகரித்துள்ளது.


அதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோலின் விலை 142 ரூபாயாக ஆக அதிகரித்துள்ள நிலையில் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் இல்லை என அந்நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.