கரைச்சி பிரதேச சபை வாயிலில் மரக்கறிகளை கொட்டிய வர்த்தகருக்கு ஏற்பட்ட நிலை..!

0

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கிளிநொச்சி சந்தை வர்த்தகரின் கடை உரிமத்தை இரத்துச் செய்த கரைச்சி பிரதேச சபையின் செயற்பாட்டுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர் ஒருவர் கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச சபையின் பிரதான வாயிலில் மரக்கறிகளை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்தச் செயற்பாடு தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வர்த்தகர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.


இந் நிலையில் இன்று 15ஆம் திகதி முதல் 10 நாட்களிற்கு குறித்த வர்த்தகரிற்கான வியாபார உரிமத்தை இரத்துச் செய்வதாகக் குறிப்பிட்டு கரைச்சி பிரதேச சபையால் வர்த்தகரின் கடையில் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்தவிடயம் தொடர்பில் மாற்றுத்திறனாளியான குறித்த வர்த்தகர் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்திடம் எழுத்து மூலமாக முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.


இதுகுறித்து ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடுசெய்திருந்த கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம், கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகள் மற்றும் தவிசாளரின் நடவடிக்கைகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தனர்.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளருக்கும், பாதிக்கப்பட்ட தமது அங்கத்தவரான வர்த்தகரிற்கும் இடையிலான தனிப்பட்ட முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவரை பழிவாங்கும் நோக்குடன் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


தமது சங்கக் கட்டடத்திற்கு வருகை தரும் வீதியின் சிறு பகுதியை திருத்தம் செய்துதருமாறு பல தடவை கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனை அபிவிருத்தி செய்து தருவதிலும் தவிசாளர் இதய சுத்தியுடன் செயற்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட தமது அங்கத்தவரான குறித்த வர்த்தகரிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மீளப்பெற்று அவர் சுதந்திரமாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


சர்வதேசத்திலும், இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி சேவைச் சந்தையில் கால் ஒன்றை இழந்த இந்த வர்த்தகரை மழை வெள்ளம் புரண்டோடும் பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்தப் பட்டுள்ளமையானது தனிப்பட்ட பழிவாங்கும் செயற்பாடாகவே தாம் அதனைப் பார்ப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த வர்த்தகருடன் வெளியில் தற்காலிக கொட்டகையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மரக்கறி வியாபாரிகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை நிரந்தர கட்டடத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.