தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சுமந்திரனின் சுத்துமாத்துக்கு முட்டுக்கட்டை போட்ட டக்ளஸ்..!

0

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர்களது பெயர் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்று ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளனர்.

பிரதமரின் விஜயராம இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போதே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான தீர்வு கோரிய மகஜர் பிரதமரிடம் வழங்கி வைக்கப்பட்டது.


இதன் போது நீண்டகாலமாக சிறைகளிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன் அவர்களது பெயர் விபரங்களும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்கு பரிகாரம் காணப்படுவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


மேலும் விவாசாயத்துக்கு பொருத்தமான தரிசு நிலங்களை விடுவித்து விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுத்து விவசாய நடவடிக்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க ஏது நிலைகளை உருவாக்க வேண்டும் என்பதுடன், கல்வியில் பெரு வீழ்ச்சி கண்டுள்ள யாழ் மாவட்டத்தை அதிலிருந்து மீட்டு முன்னேற்றுவது தொடர்பாகவும் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன் தீவக பகுதியின் குடிநீருக்கு தீர்வு காணும் முகமாக கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்களை அப்பிரதேசங்களில் உருவாக்கல், நாட்டில் இருக்கக்கூடிய ரின் மீன் தொழிற்சாலைகளை மீள இயக்க நடவடிக்கை எடுத்தல் என்பவற்றுடன் நாட்டிலுள்ள நான்கு மீன்பிடி துறைமுகங்களை புனரமைப்பது தொடர்பிலும் ,ஒலுவில் துறைமுகத்தை துறைமுக அதிகார சபையிடமிருந்து பொறுப்பேற்று கடற் றொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது


மேலும் குறித்த சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், அமைச்சரின் ஆலோசகர் தவராசா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருடன் பிரதமரின் செயலாளர் மற்றும் துறைசார் செயலாளர்களும் கலந்து கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.