வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் நள்ளிரவில் இராணுவம் அடாவடி..!

0

யாழ்.வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

அத்துடன் பலர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,நோயாளர் காவு வண்டியையும் செல்ல விடாது தடுத்ததாகவும் அதனையும் மீறி சாரதி தனது பணியை மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.


கடந்த தைப் பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தர்க்கம் உருவானது.

இதனைத் தொடர்ந்து பல சுற்றி வளைப்புக்கள் நடாத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர்.


எனினும் தைப் பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் முறுகலில் ஈடுபட்டதாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனை படையினர் தொடர்ச்சியாக தேடிவரும் நிலையில்,

பொலிஸார் நீதிமன்றில் அவ்வாறு ஒரு சந்தேகமான இளைஞனே இல்லை. அவ்வாறு ஒருவனை தேடவில்லை. என கூறியிருக்கின்ற நிலையில் நேற்று நள்ளிரவும் குறித்த இளைஞனின் வீட்டுக்குள் படையினர் நுழைந்துள்ளனர்.


எனினும் இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டில் இருந்தவர்களை மோசமாக அச்சுறுத்தியுள்ளதுடன், தாக்குதலும் நடாத்தியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றால், நீதிமன்றில் அவ்வாறு ஒரு நபரே இல்லை, நாங்கள் தேடவும் இல்லை என கூறிய பொலிஸார்,காரணமே இல்லாமல் குறித்த இளைஞனை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்பதாகவும், முறைப்பாட்டை பெற பின்னடிப்பதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.