காத்தான்குடியில் முஸ்லீம் பெண்களுக்கு சஹ்ரான் குழுவினரால் அடிப்படைவாத போதனை..!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் மூளையாக செயற்பட்ட பயங்கரவாதி, சஹ்ரான் ஹஷீம், பெண்களுக்கு அடிப்படைவாதத்தை போதிக்கவும் பயிற்சியளிக்கவும் பயன்படுத்தியதாக நம்பப்படும் இடமொன்று இன்று காத்தான்குடி, பாலமுனை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகள் சிலரின் மனைவிமாருக்கும், மேலும் சிலருக்கும் இங்கு இவ்வாறு அடிப்படைவாத, ஏனைய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளதை அடுத்து,

சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் இன்று அவ்விடத்தை சுற்றி வளைத்து சோதனை நடாத்தியுள்ளனர்.


மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் குறித்த பொலிஸ் சி.ஐ.டி. விசாரணையில், சி.ஐ.டி. தடுப்பில் உள்ள சந்தேக நபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன.


அதன்படி குறித்த சந்தேக நபரையும் அழைத்துக் கொண்டு காத்தான்குடி, பாலமுனை – கர்பலா பகுதியில் உள்ள ‘ சியாத் கார்டன்’ எனும் குறித்த ஹோட்டலை சுற்றி வளைத்த சி.ஐ.டி. மற்றும் விசேட பாதுகாப்பு படை அதிகாரிகள் அவ்வளாகம் முழுவதும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர்.


குறித்த ஹோட்டலின் தற்போதைய, முன்னாள் உரிமையாளரையும் சி.ஐ.டி.யினர் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களிடம் விஷேட வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த ஹோட்டலில் பெண்களுக்கு அடிப்படைவாதம் போதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.