5 ஆயிரம் ரூபா கொரோனா இடர் உதவிக் கொடுப்பனவில் பாரிய மோசடி..!

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராமங்களில் கிராம அலுவலர் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்


புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவுகளுக்கு ஒரு கிராம அலுவலரே கடமையாற்றி வருகின்றார்.

இந்த இரு கிராம அலுவலர் பகுதியிலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுகின்றது.

குறிப்பாக நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட வயோதிபர்கள் மாற்றுதிறனாளிகள் சிறுநீரக கொடுப்பனவை பெறுபவர்கள் மற்றும் இவற்றுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் அரசினால் 5000 ரூபா மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த மாதம் 5000 வழங்கப்பட்டு இம்மாத கொடுப்பனவு 5000 வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் கடந்த மாதம் வயோதிபர் கொடுப்பனவில் மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவுகளில் காத்திருப்பு பட்டியலில் கொடுப்பனவு பெற்றவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு மீதி 3000 ரூபாவினை வழங்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் மக்களால் வெளியில் கொண்டுவரப் பட்டதைத் தொடர்ந்து ஒரு சிலருக்கு அந்த கொடுப்பனவில் மீதி 3000 கொடுப்பனவையும் கொண்டு சென்று கொடுத்த கிராம அலுவலர் ஏனையவர்களுக்கு மிகுதி கொடுப்பனவுகளை வழங்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் சம்பவம் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் அறிந்த ஊடகங்கள் இன்று மக்களிடம் சென்று கருத்துக்களை பெற்ற வேளையில கிராம அலுவலர் இன்று ஒரு குடும்பத்துக்கு கொடுப்பனவை கொண்டு வந்து வழங்கியுள்ளார் .

குறித்த பகுதியில் இன்று கூட அந்த கொடுப்பனவு வழங்கப்படாமல் பல குடும்பங்கள் இருக்கின்றன.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5000 ரூபாயில் 2000 கொடுத்து மோசடி செய்திருப்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் வினவியபோது, குறித்த விடயம் தொடர்பில் விசேட குழு ஒன்று அமைத்து தாங்கள் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.