கோட்டா அரசின் சம்பளம், சலுகைகளை கொரோனா நடவடிக்கைக்கு ஏன் வழங்க முடியாது?

0

அரச ஊழியர்களின் ஊதியத்தில் அரைவாசியை அர்பணிக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் அரச தரப்பினர், அவர்களின் ஊதியம் , மற்றும் விசேட கொடுப்பனவுகளை அர்பணிப்பு செய்யாதிருப்பது ஏன்?,

நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அவர்களது சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவு, ஏனைய செலவுகளுக்காக பெற்றுக் கொள்ளும் நிதியை வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்காமல், அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்பார்ப்பது நியாயமற்ற செயற்பாடாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.


இதேவேளை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 5000 ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதன் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால் நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து வரும் ஒரு சில பகுதிகளுக்கு இன்னமும் முதற்கட்ட நிவாரணப் பணமும் பகிர்தளிக்கப் படவில்லை என்றும், இது இந்த மக்களுக்கு செய்யும் பெரும் அசாதாரண செயற்பாடு என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முயற்சித்து வரும் அரச தரப்பினர், சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் எமது கௌரவத்தையும், நன்றியையும் தெரிவிப்பதுடன், அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்காக முயற்சிக்காமல் வைரஸை தடுப்பதற்காக முயற்சித்திருந்தால் நாட்டுக்குள் வைரஸ் பரவாமல் நாட்டை பாதுகாத்துக் கொள்ள கூடியதாக இருந்திருக்கும்.

இதேவேளை வைரஸ் பரவலை தடுக்கும் செயற்பாடுகளில் நேரடியாக பங்குக் கொண்டுள்ள சுகாதார பிரிவு, இராணுவம் மற்றும் அரச சேவையாளர்களுக்கு வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தேவையான பாதுகாப்பு உடைகள் போதியளவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வைரஸ் பரவலினால் ஏற்படும் நெருக்கடி நிலைமை தற்போது அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்துள்ளது. அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தாது தேர்தலை நடத்துவதற்கே அக்கறை காட்டி வருகின்றது. தேர்தலை நடுத்தும் போது பின்னபற்ற வேண்டிய விதி முறைகளில் வைரஸ் பரவுவதாற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றன.

தற்போது மக்கள் வர்த்தக நிலையங்கள் மற்றும் நிதி நிலையங்களில் பேரணியாக வீற்றிருக்கும் போது வாக்களிப்பதற்காகு வீற்றிருக்கும் பேரணியினூடாக மாத்திரம் எவ்வாறு வைரஸ் பரவும் என்று அரச தரப்பினர் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆனால் தேர்தல் நடவடிக்கையில் பின்பற்றும் விதி முறைகள் ஊடாக வைரஸ் பருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. எனவே இது பெரும் அனர்த்தத்துக்கு வழிவகுக்கும்.

இதேவேளை அரசாங்கம் தற்போது அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் பிற்காலத்தில் தவறான அபிப்ராயம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. அதனாலேயே அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுமாறு குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினோம்.

ஆனால் ஜனாதிபதி அதனை கருத்திற்கொள்வதாக தெரியவில்லை. இதனையும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அவர்களது ஓய்வூதியம், சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதன் நோக்கிலே மேற்கொண்டு வருகின்றனர் என்று சில அரச தரப்பு அரசியல்வாதிகள் காண்பிக்க முயற்சிக்கின்றன.


வைரஸ் பரவலினால் எதிர்வரும் தினங்களில் பெரும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெற வாய்ப்பிருப்பது போல் தற்போதும் அந்த சிக்கலை அரசாங்கம் எதிர்நோக்கி வருகின்றது என்பதை அரசாங்கமே எடுத்துகாட்டி வருகின்றது. அதற்கேற்றால்போல் அரச தரப்பைச் சேர்ந்தவரான டி.பி.ஜயசுந்தர அரச ஊழியர்கள் அவர்களது சம்பளத்திலிருந்து அரைபகுதியை வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையிலிருந்து மீண்டு வருவதற்காக அர்பணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எம்மை பொருத்தமட்டில் அரச ஊழியர்கள் ஏன் அவர்களது ஊதியத்தை தீயாகம் செய்ய வேண்டும். அரச தரப்பைச் சேர்ந்த ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அவர்களது ஊதியம், விசேட கொடுப்பனவு மற்றும் ஏனைய செலவுகளுக்காக பெற்றுக் கொள்ளும் நிதியை அர்பணிக்க முன் வரலாமே. இது எதிர்வரும் தலைமுறைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் அல்லவா?

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 5000 ரூபாய் நிதியிலும் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அதற்கமைய இந்த நிதி வழங்கும் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இடம் பெறும் வரை தம்மால் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று கிராம சேவகர்கள் அதனை புறக்கணித்து வந்தது மாத்திரமின்றி அவ்வாறான செயற்பாடுகள் இனி இடம் பெறாது என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் மீண்டும் அந்த செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றமையும் நாம் கடந்த காலங்களில் அவதானித்திருந்தோம்.

அதற்கமைய நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பல பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பொருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆடைச் தொழிற் சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு இதுவரையிலும் இந்த முதற்கட்ட நிதி கூட பெற்றுக் கொடுக்கபடவில்லை என்று தெரிய வந்துள்ளது. இது நியாயமற்ற செயற்பாடாகும். அதனால் இவர்களுக்கான நிதியை பெற்றுக் கொடுபதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.


மத்தியக் கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வரும் இந்நாட்டு மக்கள் தொடர்பில் அரசாங்கம் பாறாமுகமாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த மத்தியகிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வரும் நபர்களாலே நாட்டுக்கு பெரும் வருமாணம் கிடைக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் அரச தரப்பினர் அவர்களை அழைத்துவருவதற்கு காண்பித்த உற்சாகத்தை , கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காகவும் காண்பிக்க வேண்டும்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக் கொள்வதில் எந்தவித பிரயோசனமும் ஏற்படாது என்பதின் காரணமாகவே அதனை புறக்கணித்தோம். இவ்வாறான கலந்துரையாடலில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கபட வேண்டும் என்றால் அது உத்தியோக பூர்வமானதாக இருக்க வேண்டும். அதனாலேயே பாராளுமன்ற கூட்டத் தொடரை நடத்துமாறு கோரிக்கை விடுத்தோம்.

இதேவேளை எதிர் தரப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் மீது திட்டமிட்ட சேறுபூசல்கள் முன்னெடுக்கபடுகின்றனர். அந்த சதிகாரர்கள் தற்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் நளின் பண்டாரவை இலக்கு வைத்துள்ளனர். சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு தொடர்பில் வேண்டுமெற்றே அவர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். அவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்று அரச தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எதிர் தரப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே இவ்வாறு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகின்றது. அரச தரப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் தங்களது உத்தியோக பூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை கூட இன்னும் கையளிக்காமல் இருக்கின்றனர்.

அதனால் இவ்வாறு உத்தியோகப்பூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை கையளிக்காமல் இருக்கும் அரச மற்றும் எதிர் தரப்பைச் சேரந்த அனைத்து உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை யொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.