அரசாங்க ஊழியர்களின் மே மாதச் சம்பளத்திற்கு வருகிறது ஆப்பு..!

0

வரவு செலவுத் திட்ட அழுத்தங்களை மக்களின் மீது திணிக்காமல் இருக்கும் வகையில் மே மாதத்திற்கான முழுச் சம்பளத்தையோ அல்லது பகுதியையோ வழங்குமாறு அரசாங்க ஊழியர்களிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார். அரச ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவிற்காக மாதம் ஒன்றுக்கு 100 பில்லியன் ரூபா பணம் தேவைப்படுகின்றது.


ஒரு மாத சம்பளத்தை அனைத்து அரச ஊழியர்களும் வழங்கினால் அந்த தொகை திறைசேரிக்கு செல்லும் எனவும் இதன் மூலம் அரச செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஊடாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான கடன் அழுத்தங்களை முகாமைத்துவம் செய்து கொள்ள முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.


வெளிநாடுகளிலிருந்து கடன், நன்கொடைகள் பெற்றுக் கொள்ளும் அதேவேளை எமது சக்தியையும் நாம் பிரதிபலிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர், அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அரச வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து பணியாளர்களும் தங்களது சம்பளத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஏனைய அரச ஊழியர்களும் தங்களது சம்பளங்களை வழங்கி இதில் இணைந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அனைவருக்கும் மாதச் சம்பளத்தை வழங்க முடியாதிருக்கலாம் எனவும் அவ்வாறானவர்கள் அரைவாசி சம்பளம், ஒரு கிழமைக்கான சம்பளம் அல்லது நாள் ஒன்றுக்கான சம்பளத்தையேனும் நன்கொடையாக வழங்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பசில்ராஜபக்ஷ போன்ற முன்னாள் அமைச்சர்கள் ஓய்வூதியம் பெற்றபடி ஜனாதிபதி செயலணி உள்ளிட்டவைகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்டு மேலதிக அரச சம்பளம், சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.


அதேபோல் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சகல சலுகைகள், சம்பளங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசின் சகல சலுகைகளும் புறக் கணிக்கப்பட்ட நிலையில் அரச சம்பளத்தை மட்டும் நம்பி பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் வாழும் அரச ஊழியர்கள் மத்தியில் குறித்த விடயமானது பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை எமது ஊடகமானது குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த மாதமே எச்சரிக்கை செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.