சர்கானுடன் தொடர்புடைய நபரின் கட்டடத்திற்கு முன்னாள் அமைச்சர் நிதி வழங்கியுள்ளார்..!

0

நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திய நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் நடாத்தி வந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகம் , கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் 2 ஆம் மாடியில் உள்ள அறையொன்றில் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டுள்ளது, இந்நிலையில் இன்று சி.ஐ.டி.யினரால் அந்த பள்ளிவாசல் அறை அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.


இதன் போது அங்கிருந்து பல ஆவணங்கள், குறித்த அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் குறித்த பற்றுச் சீட்டுக்கள் உள்ளிட்டவை சி.ஐ.டியால் மீட்கப்பட்டதாகவும், தற்போது அவ்வறைக்கு சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இதனைவிட குறித்த சந்தேக நபரின் அமைப்பின் பிரதான அலுவலகம் புத்தளம் , மதுரங்குளி, அசார் நகரை மையப்படுத்தி இயங்கியதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதுவும் சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த கட்டிடம் கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சரின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன


இந்நிலையில் இவ்விரு இடங்களில் இருந்தும் மீட்கப்பட்ட ஆவணங்கள், பற்றுச் சீட்டுக்கள், புத்தகங்கள், சஞ்சிகளை சிறப்பு குழு ஆராய்ந்து வருவதாகவும், அவ்வமைப்புக்கு நிதி அளித்தவர்கள் உள்ளிட்ட விடயங்களை கண்டறிய விஷேட விசாரணைகள் இடம் பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று புத்தளம் – கற்பிட்டி, 4 ஆம் குறுக்குத் தெரு பகுதிக்கு சென்ற சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு நபர் ஒருவரை அவரது வதிவிடத்தில் வைத்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட நபர் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த நபர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ள நிலையில், அதன் நிதி ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ய பயிற்சி நெறிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடாத்திய குண்டுதாரிகள் வளவாளர்களாக வந்து சென்றுள்ளமையும் விசாரணைகளில் வெளிப் படுத்தப்பட்டுள்ளது.


அவ்வாறு நடாத்தப்பட்ட பயிற்சி நெறிகளின் போது பயிற்சி நெறிகளுக்கு பொறுப்பாளராகவும் குறித்த நபரே செயற்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

இந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் பொறுப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படைவாத போதனை முகாம்களில், பயங்கரவாதி சஹ்ரான், சங்ரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் மற்றும் சினமன் கிரான்ட் ஹோட்டல் தற்கொலைதாரி மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கீழ் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் சி.ஐ.டி. எனும் குற்ற விசாரணைத் திணைக்கள சிறப்புக் குழுவின் விசாரணைகளின் கீழ் இருந்த இந்த அரச சார்பற்ற நிறுவன பொறுப்பாளரான சந்தேக நபர் குறித்த மேலதிக விசாரணைகள் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவினால் இவ்விசாரணைகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மேலதிக விசாரணைகளை சி.ரி.ஐ.டி.யினர் ஆரம்பித்துள்ளனர். முன்னதாக கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­ வெ­டிப்புச் சம்பவங்கள் பதி­வா­கின.

கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வ­பிட்டி – புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகி­யன தாக்­கு­த­லுக்கு இலக்காகிய கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளாகும்.

இதனைவிட கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள சங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய மூன்று ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம் ­பெற்­றன. மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம் ­பெற்­றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.


இந்நிலை­யில் அன்று பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்டு வெடிப்புச் சம்­பவம் பதி­வா­னது.

அதனைத் தொடர்ந்து பிற்­பகல் 2.15 மணி­ய­ளவில், குண்­டு­ வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­ த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரிகளை இலக்கு வைத்து தெமட்­ட­கொட மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.

நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற இந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகள் தற்போது 14 சிறப்புக் குழுக்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.