ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்த வலயப் பணிப்பாளருக்கு அதிகாரத்தை வழங்கியது யார் ?

0

துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களுக்கு Np/44/20/2/3/FA/GENERAL இலக்க கடிதத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனம் செலுத்துகிறது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் துணுக்காய் கல்வி வலய செயலாளர் இந்திரபாலன் மேலும் தெரிவிக்கையில்,

அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி – ஒரு நாள் சம்பளத்தை கொவிட்-19 க்கான அரச நிவாரணத்துக்கான அறவீடாக – நிதி அறவிட முடியாது என ஏற்கனவே – இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண கல்வியமைச்சுக்கும் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் – ஒரு நாள் சம்பளத்தை ஆசிரியர்களிடம் அறவிடுவதற்கு – சம்மதக் கடிதத்தை அதிபர், ஆசிரியர்களிடமிருந்து பெற்று வழங்காவிட்டால் – மே மாத சம்பளப் பட்டியல் அனுப்பப்பட மாட்டாது என துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமையானது மிகுந்த கண்டனத்துக்குரிய விடயமாகும்.

அதிபர், ஆசிரியர்கள் தமது சம்பளத்தில் – நிதி வழங்குவது தொடர்பாக அவர்கள்தான் தீர்மானிக்க முடியுமேயன்றி – வேறெவரும் தீர்மானிக்க முடியாது. அச்சுறுத்திப் பெற முயற்சிக்கவும் கூடாது.

சம்மதம் தெரிவிக்க விரும்பாத அதிபர், ஆசிரியர்கள் – விருப்பமின்மை தொடர்பாக கடிதம் வழங்கவேண்டிய எந்தவிதமான அவசியமுமில்லை. அவர்களை கடிதத்தைக் கோரி வற்புறுத்தவும் முடியாது.

அதற்காக – அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்காமல் நிறுத்துவதற்கு துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கியது யார் ?

இத்தகைய அச்சுறுத்தும் செயற்பாடுகளை கல்விப்புலம் சார் தரப்புகள் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம். எனத் தெரிவித்தார்.