இணைப்பில் உள்ள வடமாகாண ஊழியர்களுக்கு இரண்டு மாத விசேட கால நீடிப்பு..!

0

வடமாகாணத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களில் தற்காலிக இணைப்புக்களை பெற்று வேறு இடங்களில் பணியாற்றுபவர்கள் அதே இடங்களில் இரண்டு மாதங்கள் பணியாற்ற முடியும் என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


வடமாகாணத்தில் வன்னிப் பகுதியில் பணியாற்றிய நிலையில் பல்வேறு காரணங்களிற்காக தற்காலிக இணைப்பை பெற்ற நிலையில் இணைப்புக் காலம் முடிவடைந்தவர்கள், விடுமுறை பெற்றவர்களின் நிலைமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் பலர் தற்காலிகமாக பிரசவ காலம், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளிற்காக பிறமாவட்டங்களில் இணைப்பு பெற்ற நிலையில், அந்த கால எல்லை முடிவடையும் பட்சத்தில் மேலும் 2 மாதம் அனைத்து ஆசிரியர்கள், உத்தியோகத்தர்களுக்கும் காலம் நீடிக்கப்படுகிறதாக தெரிவித்தார்.


அத்துடன் அவர்கள் தற்போது பணியாற்றிய பாடசாலைகளிலேயே ஒப்பமிட முடியும் எனவும் அவர் குறிபிட்டார்.அதேநேரம் சம்பளமற்ற விடுமுறையை பெற்று வெளிநாடுகளிற்கு சென்றவர்கள், பணிக்கு திரும்ப முடியாத நிலையில் பதற்றமடைய தேவையில்லை என்றும், அவர்களிற்கும் மேலும் 2 மாதம் சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும் எனவும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்