பயங்கரவாதி சஹ்ரானின் மற்றுமொரு தீவிரவாத ஆயுத பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு..!

0

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹசீமின் மற்றுமொரு தீவிரவாத ஆயுத பயிற்சி முகாம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டுக்கு பின்னர் குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த ஆயுத பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மூதூர் பிரதேசத்தில் இந்த முகாம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சாதீக் என்ற சந்தேக நபரிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் முகாம் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் மாவனல்ல பகுதியில் புத்தர் சிலைகளை உடைத்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் என்பது குறிப்பிடத்தக்கது.


சாதீக் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு துருக்கி வழியாக சிரியா சென்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

பண்ணை ஒன்றை நடாத்தும் போர்வையில் பதினைந்து ஏக்கர் பரப்புடைய பகுதியில் இந்த முகாம் நடத்தப்பட்டிருந்ததாகவும், மாவனல்ல பகுதியில் உள்ள மதகுரு ஒருவருக்கு இந்த காணி சொந்தமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த முகாமில் மாவனல்ல பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் ஆயுத பயிற்சி பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி பெற்ற இளைஞர்களையும் குற்ற விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.