தபால் மூல விண்ணப்பத்தை ஏற்பது ஆபத்து எனில் மாணவர்களுக்கு செயலட்டை வழங்குவது?

0

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தபால் மூல விண்ணப்பங்கள் பலரின் கைகளின் ஊடாக பறிமாற்றப்படுவதாகவும் அவ்வாறு பறிமாற்றம் இடம் பெறும் போது ஒருவருக்காவது கொரோனா தொற்று இருக்க கூடும் எனவும் அவரின் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 27 ஆம் திகதிக்குள் அனைத்து அரசு அலுவலகங்களும் மீண்டும் இயங்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளுக்கு அது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் எனவும் கபே கூறியுள்ளது.

இதேவேளை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மாதிரிப் பரீட்சைகள், செயலட்டைகளை வழங்க கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந் நிலையில் மாணவர்களுக்கு செயலட்டைகள், மாதிரிப் பரீட்சைக்கு வழங்கும் வினாப் பத்திரங்கள் பல்வேறு தரப்பினர்களின் கைகளில் படுவதும், வினாப்பத்திர திருத்தத்தின் போது பலரின் கைகளில் படுவதனூடாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு கொரோனா பரவாது என்பதற்கான உத்தரவாதத்தை கல்வி அமைச்சு வழங்க முன் வருமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.


எனவே இவ்விடயத்தில் சகல தரப்பினரும் அவதானம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.