பயங்கரவாதிகள் உங்கள் அருகிலும் இருக்கலாம்; இரண்டாவது தாக்குதல் சூழ்ச்சி அம்பலம்..!

0

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முன்னெடுக்கப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான சி.ஐ.டி. விசாரணைகளில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதல்களை நடாத்த சில நாட்களுக்கு முன்னர், அந்த தாக்குதல்களின் பிரதானியாக செயற்பட்ட பயங்கரவாதி சஹ்ரானின் கும்பல், கருத்து வேறுபாடால் இரண்டாக பிளவுபட்டதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டது.


எனினும் அந்த பிளவானது 2 ஆம் கட்ட தாக்குதல் ஒன்றினை நடாத்தும் நோக்கில் உளவுத் துறையினரையும் விசாரணையாளர்களையும் திசை திருப்பும் நாடகம் என தற்போதைய விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று விஷேட செய்தியாளர் சந்திப்பொன்றினை சி.ஐ.டி.யின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவுடன் இணைந்து நடாத்திய போது அவர் இதனை வெளிப்படுத்தினார்.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதன் போது 2 ஆம் கட்ட தாக்குதல் ஒன்றிணை நடாத்த சஹ்ரான் கும்பல் திட்டமிட்டிருந்தமை அப்போதே வெளிப்படுத்தப்பட்டது. இந் நிலையில் அது குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல்களுக்கு முன்னர் சஹ்ரானின் கும்பல் 2 ஆக பிரிந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டன. அந்த பிரிவானது திட்டமிட்ட வகையில் திசை திருப்பலுக்காகவே இடம் பெற்றுள்ளது.


உளவுத் துறையையும் விசாரணைப் பிரிவினரையும் திசை திருப்ப அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில், தெற் காசிய நாடொன்றில் தாக்குதல் ஒன்றினை நடாத்திய பின்னர்,

வெளிநாட்டில் உள்ள சில பயங்கரவாதிகள் இலங்கையை அவர்களது பாதுகாப்பு இடமாக பயன்படுத்த வைத்திருந்த இரகசிய திட்டங்கள் பலவும் தற்போது அம்பலமாகியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

அத்துடன் 2 ஆம் கட்ட தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருந்த பலரும் சி.ஐ.டி.யினரின் கைதில் உள்ளதாகவும் மேலும் சிலரை தேடி வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


இஸ்லாம் மதத்தை தவறாக விளக்கப்படுத்தி, அதன் பால் முஸ்லிம் இளைஞர்களை ஈர்த்து, தீவிரவாதம் போதிக்கப்பட்டுள்ளது. இதனூடாகவே தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஒருவர் கூட, அவ்வாறு அடிப்படை வாதத்தை முஸ்லிம் இளைஞர்களிடையே போதிக்க, அமைப்புக்களை உருவாக்கி அதில் குண்டுதாரிகளுடன் இணைந்து தலைமையேற்று செயற்பட்டுள்ளமையின் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அவரைக் கைது செய்ய அத்தகைய சான்றுகளும் ஏதுவாகின. ‘என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.