கொரோனா ஊரடங்கு சட்ட காலப் பகுதியில் சிறுவர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு..!

0

கொரோனா காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்ட காலப் பகுதியில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த காலப் பகுதியில் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளில் 43 வீதமானவை சிறுவர் சித்திரவதைக்குள்ளான சம்பவங்களுடன் தொடர்புபட்டவை என ​தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித விதான பத்திரன குறிப்பிட்டார்.


மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 16 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 377 முறைப்பாடுகள் அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அவற்றில் 163 முறைப்பாடுகள் சிறுவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் கிடைத்துள்ளதாவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

இவைகள் பெற்றோர், பாதுகாவலர் மற்றும் உறவினர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன் காரணமாக சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உளநல ஆலோசனை சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

UNICEF உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளூடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.


1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிப்பதனூடாக தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதான பத்திரன குறிப்பிட்டார்.

இதேவேளை ஊரடங்கு காலப் பகுதியில் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.