அரச ஊழியர்களின் மே மாதச் சம்பளத்தை 50% ஆல் குறைக்க யோசனை..!

0

அனைத்து அரச ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கு (W&OP) ஒப்படைத்தால் மே மாதம் அரசின் செலவு 50 பில்லியன் ரூபாவினால் குறைந்து வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபாவினால் குறைவடையும் என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர கேட்டுள்ளார்.


ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, தனது மே மாதத்திற்கான முழு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு ஒப்படைப்பதாக அறிவித்து இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில்,

தான் தன்னார்வமாக அவ்வாறு செய்வது தேசத்தின் அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு நெருக்கடியற்ற வரவு செலவுத் திட்டமொன்று தேவை என்ற காரணத்தினாலாகும் என பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார்.


அரசின் மாதாந்த சம்பள பட்டியல் 80 பில்லியன் ரூபாவாகும். அதாவது 8 ஆயிரம் கோடி ரூபாவாகும் என பீ.பி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். அரச கூட்டுத்தாபனங்கள், வங்கி மற்றும் பல்கலைக் கழகங்களை சேர்த்துப் பார்க்கும் போது அது சுமார் 90 பில்லியன் முதல் 100 பில்லியன் வரையாகும்.

கொரோனாவுக்கு மத்தியில் வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளாகியுள்ள மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி வழங்கும் தூரநோக்கு தலைமைத்துவம் ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் சிறப்பானதாகும் என சுட்டிக் காட்டிய அவர், ஜனாதிபதியின் இந்த முயற்சிக்கு உதவுவதற்காக தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


எனவே அனைத்து அரசக ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரை வாசியையேனும் தமது தங்கி வாழ்வோருக்கு நன்மை பயக்கும் அரச ஊழியர்களின் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கு ஒப்படைத்தால் மே மாதம் அரசின் செலவு 50 பில்லியன் ரூபாவினால் குறைந்து வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபாவினால் குறைவடையும் எனவும் பீ.பி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 224ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தை புனரமைக்க உருவாக்கப்பட்ட கெல்பிங் அம்பாந்தோட்டவில் சேர்க்கப்பட்ட 1000 மில்லியனுக்கும் அதிகமான நிதி அப்போதய பிரதமரின் ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது.


அதேபோல் ஒரு நிலை மீண்டும் கொரோனா சுகாதாரக் கட்டமைப்பு அபிவிருத்தி என்ற பெயரில் சேகரிக்கப்படும் நிதியும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.