கிராம சேவகர் மீது தாக்குதல்; மொட்டின் இணைப்பாளர் மொகமட் சியாம் தலைமறைவு..!

0

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காகித நகர் 210D கிராம சேவை அதிகாரி தாக்கப்பட்டு இன்று வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

காகித நகர் கிராம சேகர் பிரிவிலுள்ள மக்களுக்கு ஏப்ரல் மாத்திற்கான சமுர்த்தி கொடுப்பனவும், அதனுடன் இணைந்த உலர் உணவுப் பொதிகள் காகித நகர் கிராம அதிகாரி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் காகித நகர் பிரிவில் கிராம சேவை அதிகாரி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உதவிகளை வழங்கும் சமயத்தில் அவ்விடத்தில் நின்ற நபர் மக்களை புகைப்படம் எடுப்பதாக கிராம சேவை அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்வரிடம் முறையிட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் வெள்ளிக் கிழமை மாலை கிராம சேவை அதிகாரி காவத்தமுனையைச் சேர்ந்த புகைப்படம் எடுத்த நபரான நைனா முஹம்மது முஹம்மட் சியாம் என்பவரை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கூறிய போது கிராம சேவை அதிகாரியை பிடித்து தள்ளியதால் கிராம சேவை அதிகாரி விழுந்துள்ளார்.

அதன் பின்னர் சிறு வாக்குவாதம் இடம் பெற்றது. கிராம சேவை அதிகாரி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிராம அதிகாரியை தாக்கிய நபரை பொலிஸார் தேடி வரும் நிலையில், இன்று சனிக் கிழமை மாலை வரை தலை மறைவாகியுள்ளார்.

இன்று உடலில் சற்று வலி அதிகமாக இருந்ததால் கிராம அதிகாரி, வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்கிய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

காகித நகர் 210D கிராம சேவை அதிகாரியை தாக்கிய காவத்தமுனையைச் சேர்ந்த நைனா முஹம்மது முஹம்மட் சியாம் என்பவர் காவத்தமுனை பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.