வவுனியாவில் சமுர்த்தி அலுவலரின் வீட்டு கூரையைப் பிரித்த திருடன் கைது..!

0

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் இறங்கிய திருடனை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று அதிகாலை 3.30மணியளவில் வவுனியா உக்குளாங்குளம் சிவன் கோயில் சந்தியில் உள்ள வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அலுவலரின் வீட்டில் இடம் பெற்றுள்ளது.


வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டு இருந்த போது, வளவுக்குள் நுழைந்த திருடன் குறித்த வீட்டில் உள்ள மரம் ஒன்றின் கூரை மேல் ஏறி வீட்டின் கூரையை கழட்டி அதன் வழியாக வீட்டுக்குள் இறங்கியுள்ளான்.

இதனை அவதானித்த குறித்த வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டும், தொலைபேசி மூலமாகவும் அப்பகுதி இளைஞர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.


விரைந்து செயல்பட்ட இளைஞர்கள் திருடனை மடக்கிப் பிடித்து மரத்தில் கட்டி வைத்துடன், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொலிசார் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினர்.


சம்பவ இடத்துக்கு வந்த வவுனியா பொலிஸார் திருடனை கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

எதிர்வரும் நாட்களில் ஊரடங்கு தளர்த்தப்படாத பட்சத்தில் இவ்வாறான சம்பவங்களை நாடளாவிய ரீதியில் அதிகமாக எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.