ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை அனுமதித்தால் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை இழப்பர்..!

0

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படும் வரை அவர் சட்ட மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

இது குறித்து பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதம நீதியரசர் ஜயந்ந ஜயசூரியவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.


அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அவர் குண்டுதாரிகள் இருவருடன் தொடர்புகளைப் பேணியதாகவும் அவர்களுடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களிலும் வெவ்வேறு பதவிகளை வகித்ததாகவும் அதுமாத்திரமன்றி குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டத்திலும் பங்கு கொண்டதாகச் சந்தேகிப்பதாக கடந்த 15 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.


நபரொருவர் குற்றவாளி என்பது நிரூபணமாகும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்படவேண்டும் என்பதை நாமறிவோம்.

எனினும் இந்த சட்டத்தரணியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பாரதூரத் தன்மையைக் கருத்திற் கொண்டு விசாரணைகளின் பின்னர் அவர் நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்படும் வரையில் அவரை சட்டத்துறையில் பணியாற்ற அனுமதிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனக் கருதுகின்றோம்.


அதுமாத்திரமன்றி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நிரூபணமாக முன்னர் அவர் தனது தொழிலில் ஈடுபட அனுமதியளிக்கும் பட்சத்தில் மக்கள் நீதிமன்றத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழப்பதற்கும் வாய்ப்புள்ளது.

எனவே அவரது குற்றமற்ற தன்மை உறுதியாகும் வரை அவர் சட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.