ஏப்ரல் 20 ற்குப் பின் 20% – 50% ஊழியர்கள் கடமைக்கு; வடக்கில் ஊரடங்கை தளர்த்தும் சாத்தியம்..!

0

ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் தொடர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களில் 20 வீதமானோரை வேலைக்கு அழைக்கவும் அச்சுறுத்தல் இல்லாத மாவட்டங்களில் 50 வீத ஊழியர்களை தொழிலில் ஈடுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அந்த வகையில் “கொவிட் -19 ” கொரோனா பரவலை அடுத்து நாட்டின் தற்போதைய தேசிய பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும். மக்களுக்கான உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். ஆகவே அத்தியாவசிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.


எனவே எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் தொடர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரச ஊழியர்களில் 20 வீதமானவர்களை வேலைக்கு வரவழைத்து நிறுவனங்களை இயக்குவதெனவும்,

அதேபோல் கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் குறைந்த ஏனைய வெளி மாவட்டங்களில் தொழிற் சாலைகள் , நிறுவனங்கள் மற்றும் ஏனைய தொழில்களுக்கு 50 வீதமானவர்களை தொழிலில் ஈடுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் தனியார் துறையினரும் இவ்வாறான அரச ஆலோசனைகளை பின்பற்றி தமது ஊழியர்களை வேலைக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்க முடியும்.


இன்றுள்ள அச்சுறுத்தலான சூழலில், முகக் கவசங்கள், கையுறைகள், தற்காப்பு ஆடைகள் மற்றும் தலை கவசங்கள் என்பவற்றின் பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தினால் ஐரோப்பிய நாடுகள் இவற்றை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் தேயிலை உற்பத்தி, நெல் உற்பத்தி, மரக்கறி விளைச்சல்கள், அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் மருந்து உற்பத்திகளை உடனடியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினருக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.அதேவேளை வடக்கில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 19ம் திகதிக்குப் பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் இது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும், வடக்கு ஆளுனர் மற்றும் பொலிசாருடன் ஆராய்ந்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களின் நகரப் பகுதி தவிர்ந்த ஏனைய புறநகர் பகுதிகளில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் ஊரடங்கை உடனடியாக தளர்த்தும் சாத்தியமில்லை. சில நாட்களில் யாழின் சில பகுதிகளின் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.