பாலித தேவபெரும இப்படியானவரா? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மனோ..!

0

நண்பர் பாலிதவை எம்முடன் ஒப்பிட்டு சிலர் பேச தொடங்கியுள்ளார்கள். அதற்கான அவசியம் இல்லை என்பதற்காகவே இந்த பதிவு.

நண்பர் பாலித தேவரபெரும, களுத்துறை மாவட்டத்தில் அவரது தொகுதி மக்களுக்கு பணி செய்வதை வரவேற்கிறேன்.

அங்கே களுத்துறை மாவட்டத்தில் இருந்துகூட பலர் என்னை அழைத்து உதவி கோருகிறார்கள். எல்லோராலும், எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது. அவரால் முடிந்ததை அவர் செய்கிறார்.

இங்கே நாம் எம்மால் முடிந்ததை செய்கிறோம். ஆனால், அவரை விட பல மடங்கு வாழ்வாதார நிவாரண பணிகளை, நாம் இங்கே, பல மாவட்டங்களில், எமது வலைப்பின்னல் மூலம் செய்து விட்டோம். இன்னமும் செய்கிறோம்.

நண்பர் பாலித, அவரே சமைப்பது, அவரே கொண்டு போவது, அவரே பரிமாறுவது, சுதந்திரமாக உடை உடுத்துவது, தெருவில் தூங்குவது, இவற்றை படம் பிடித்து ஊடகங்களில் பதிவேற்ற ஒரு குழு அவருடன் இருப்பது, என்று அவரது பாணி போகிறது.

அதை அவர் செய்யட்டும். எதை செய்தாவது அவர் மக்களுக்கு வாழ்வாதார நிவாரண பணி செய்வதை வாழ்த்தி வரவேற்கின்றேன்.

சும்மா இருந்துகொண்டு, முகநூல் அரசியல் செய்யும் திருட்டு அரசியல் பேர்வழிகளை விட நண்பர் பாலித நூறு மடங்கு உயர்ந்தவர்.

அவரிடம் சாதாரண மக்களுடனேயே வாழும் எளிமை இருக்கிறது. நானும் நிச்சயமாக எளிமையானவன்தான். ஆனால், என் எளிமை என்பதற்கு அர்த்தம் வேறு. யோசித்து பார்த்தால் இது புரியும்.

அவருடன் தயவு செய்து என்னை ஒப்பிட வேண்டாம். எனது தளம், களம், பாணி வேறு. அவரது பாணி வேறு.

எனக்கும், நானே சந்தைக்கு போய் பொருட்கள் வாங்கி, நானே சமைத்து, நானே எடுத்து போய், நானே கொடுக்க முடியும். நான் அதை செய்யவில்லை. நாம் எமது வலைப்பின்னல் மூலம் உலர் உணவுகளை கொடுக்கிறோம். அது அவர் பாணி. இது என் பாணி.

கடந்த 2018ல் பாராளுமன்றத்தில், மிளகாய் வீசி, அடித்துக்கொண்ட வேளையில், இவரும் கத்தி போன்ற பொருளை எடுத்துக்கொண்டு. ஓடிப்போய் சண்டையில் ஈடுபட்டார்.

நான் என் இருக்கையில் இருந்தபடி அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒருவேளை, நானும் ஓடிப்போய், சண்டை போட்டு கட்டி புரண்டு இருக்க வேண்டுமோ? இல்லை. அது அவர் பாணி. இது என் பாணி.

நாம், இன்று எதிர்கட்சி என்ற முறையில், ஒரு கோணத்தில், வாழ்வாதார நிவாரணங்கள் வழங்குவதை இன, மத, அரசியல் பாரபட்சங்கள் இன்றி முறையாக செய்யும்படி அரசை வலியுறுத்தி, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் இருக்கும் கூட்டங்களில் தவறாமல் கலந்துக் கொண்டு தேசிய அரங்கில் நமது மக்களுக்காக குரல் எழுப்புகிறோம்.

அதேவேளை, இன்னொரு கோணத்தில், மத்திய அரசு வரும்வரை காத்திருக்காமல், நாமே நமது கட்சி வலைப்பின்னல், சமூக நிறுவனங்கள், கொடைவள்ளல்கள் ஆகியோரின் துணையுடன் இயன்ற உதவிகளை சொந்த நிதியின் மூலம் மக்களுக்கு செய்து வருகிறோம்.

நாம் இந்த இரண்டு கோணங்களில் எம் கடமையை செய்கிறோம்.

பாலித தெவர, என்னுடன் மிக நட்புடன் பழகுபவர். சிங்களத்தில் மட்டுமே பேசுவார். அவரது மகன் இறந்த போது அவர் வீட்டுக்கு போய் நீண்ட நேரம் அவருடன் அமர்ந்து இருந்தேன். அந்த மரணம் அவரை மிகவும் பாதித்தது.

அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஒருபோதும் பாராளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்தி நான் பார்த்தது இல்லை.

எம்பிக்களின் முக்கியமான இன்னொரு பணியான, பாராளுமன்றத்தின் பல்வேறு குழுக்களில், பங்கேற்று, கருத்து பரிமாறி, நாட்டின் போக்கு தொடர்பில் முடிவுகளை எடுக்கும், அப்படி எந்தவொரு குழுவிலும் அவர் பங்கு பற்றியதாக நான் அறியவில்லை.

பாராளுமன்றத்துக்கு வெளியேயும், கலாச்சார, தொழிற்சங்க, அறிவுசார், சிவில் சமூக மேடைகளில் அவரை நான் கண்டதில்லை.

கடந்த ஒரு பத்து ஆண்டுகளாக நான் நூற்றுக்கணக்கான சிங்கள தொலைக்காட்சி ஊடகங்களின் அரசியல் விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். இதில் ஒன்றிலும் இவரை நான் கண்டது இல்லை.

தேசிய அரசியல் மேடைகளிலும் அவர் ஏறி பேசியதை நான் கண்டது இல்லை.

களுத்துறை மாவட்டத்தில் வாழும் தமிழ் தொழிலாளருக்கு சோறு கொடுக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். அது நல்லது.

ஆனால், அதே தமிழ் தொழிலாளரின் அரசியல், சமூக உரிமைகள், தாம் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கும் உரிமை, போன்றவற்றை அவர் பெரிதும் அங்கீகரிப்பது இல்லை.

அவரும், அவரது மகனும், ஒரு களுத்துறை மாவட்ட உள்ளூர் தமிழ் அரசியல்வாதியை அடித்து, அவமானப்படுத்தி, மத்துகமை முச்சந்தியில் முழந்தாளிட்டு உட்கார வைத்திருந்தார்கள்.

அதன் பிறகும் அந்த தமிழ் அரசியல்வாதியை அவர் மிரட்டிக்கொண்டு இருந்தார் என எனக்கு முறையீடு செய்யப்பட்டது. நான் ரணிலிடம் இதை சொன்னேன். இது பழைய ஒரு கதை. ஆனாலும் இது நடந்தது.

பாலித, இயல்பாகவே சண்டைக்காரர். ஒருமுறை அவரது கட்சி தலைவர் ரணிலையே அடிக்க போய் விட்டார். இவை அவரது பாணி.

என்றாலும் பாலித, இன்று மக்களுக்கு சோறு போடுகிறாரே, ஆகவே அவரை பாராட்டுகிறேன். மேலும் அரசியல்வாதிகள் காலவோட்டத்தில் மாறுவது இலையா?

இதையெல்லாம் மீறி அவர், இயற்கை, செயற்கை இடர்களின் போது தெருவில் இறங்கி மக்களுடன் செயற்படுகிறார். இந்த மக்கள் பணி, அவர் உடம்பில் ஊறியது. ஒரு கிராமிய சிங்கள மனிதனின் எளிமை அவரிடம் அபரிதமாக உண்டு.

களுத்துறை மாவட்டத்தில், அவரது தொகுதியில் அவர் ஓடி திரிகிறார். அவரது மாவட்ட சிங்கள அரசியல்வாதிகளுக்குதான், அவர் முதல் உதாரணம்.

அவர் மீது பொலிஸ் நடவடிக்கை எடுக்குமானால், அது தூரதிஷ்டமே. தனக்கு உதவினார் என பாலிதவே கூறும் நாமல் ராஜபக்ச, இந்த விஷயத்தில் அவருக்கு உதவிடுவார் என எண்ணுகிறேன்.

மனோ கணேசனின் இந்தப் பதிவானது வடகிழக்கில் பல்வேறு இடர்களின் மத்தியில் உதவிடும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகளை புறந்தள்ளி பாலித தேவபெருமவை புகழ்ந்து, காவடி தூக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்.