வவுனியாவில் அதிகாரிகளின் அசமந்தத்தால் இன்றைய ஊரடங்கின் அவல நிலை..!

0

வவுனியாவில் தொடர் ஊரடங்கின் காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஊரடங்கு தளர்வு காலத்தில் கொரோனா உட்பட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஊரடங்கு தளர்வு நேரத்தின் போதான போக்குவரத்து ஒழுங்கமைப்பு இன்னும் சீருக்கு வராத நிலையில், வீதிகள் மக்களால் நிறைந்து காணப்பட்டுள்ளது.


இதேவேளை வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளால், குறிப்பாக கோழி இறைச்சி கடைகளால் பாரிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் கோழி விற்பனைக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.


எனினும் அங்கு எதுவித சுகாதார நடைமுறையோ, மனிதாபிமானமோ பின்பற்றப்படாது கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இக் கோழிகளால் தோற்று நோய்கள் ஏற்படாது என யாராலும் உத்தரவாதம் வழங்க முடியுமா?

குறித்த கோழிகளில் நோய், தெள், பேன் என்பன காணப்படலாம். இவை வீதிகளில் பயணிப்பவர்கள் மீது தொற்றுவதனூடாக மக்கள் தொற்று நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு மிக உயர்வாகவே காணப்படுகின்றது.

அத்துடன் விற்பனை நடவடிக்கையின் போது கோழிகளின் சிறகுகள், செட்டைகள் என்பன காற்றில் பறந்து வீதியால் செல்பவர்களை பாதிப்படையவும், அருவருப்படையவும் செய்கின்றது.


அதேவேளை கோழிகளை போயா தினங்களில் வெட்டத் தடை செய்துள்ள அரசு, இங்கு கோழிகளை சொப்பின் பைகளிலும், உரப் பைகளிலும் உயிருடன் சித்திரவதை செய்து கொண்டு செல்வதற்கு அனுமதியளித்துள்ளது.

இது தர்மத்தை போதிக்கும் பெளத்த சிங்கள அரசுக்கும், இந்து மக்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள வவுனியா மக்களுக்கும் அடுக்குமா?

அத்துடன் வெளிமாவட்ட விவசாய உற்பத்திகளை தடை செய்து உள்ளூர் விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்க அரசாங்க அதிபர் மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

அதேவேளை இங்கு விலைகள் கட்டுப்பாட்டு விலைகளில் விற்கப் படுகின்றனவா? என்றால் இல்லை என்பதாகும். அதாவது தவிச்ச முயலை அடிக்கும் பகற் கொள்ளையே நடைபெறுகின்றது.


ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது இங்கு அவசர அவசரமாக வரும் மக்களிடம் அதிக விலையில் மரக்கறிகள் விற்கப்படுகின்ற அதேவேளை தரம் குறைந்த கருவாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனை விட சில இடங்களில் பெண்களுடன் இரட்டை அர்த்தக் கதைகளும், சில்மிஷக் கதைகளும் நடக்கின்றன.

மேலும் இன்று நகரில் பலசரக்கு கடைகள், மருந்தகங்கள் என்பன திறக்கப்பட்டு வாகன திருத்த கடைகள், தொலைத் தொடர்பு கடைகள், இலத்திரனியல் திருத்தக் கடைகள், புத்தகக் கடைகள் என்பன பூட்டப்பட்டன.

 

தற்போது கொரோனா காரணமாக முடங்கியுள்ள மக்கள் கொரோனாவுடன் அதிக உஷ்ணமான கால நிலையையும் எதிர் கொள்கின்ற அதேவேளை வெளி இடங்களுக்கும் செல்ல முடியாது வீட்டிலேயே கழிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் முடங்கியுள்ளது.

எனவே இக்காலங்களில் தொலைபேசி, மின்விசிறி உள்ளிட்ட இலத்திரனியல் திருத்தல் கடைகள், தொலைத் தொடர்பு கடைகள், புத்தகக் கடைகள், வாகன திருத்தக் கடைகள் என்பன கட்டாயம் திறக்கப்பட வேண்டும். அவைகளும் அத்தியாவசியமானவை.


மாறாக அழகுக் கலை நிலையங்கள், பான்சிக் கடைகள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், புடைவைக் கடைகள், மதுபான சாலைகள் என்பவற்றை பூட்டுவது நியாயமானது.

அத்துடன் வீதிப் போக்குவரத்தை ஒரு வழிப் போக்குவரத்தாக வவுனியா நகரப் பகுதிக்கு மாற்றுவதனூடாக வாகன நெரிசலையும், மக்களின் நெரிசலையும் கட்டுப்படுத்தலாம்.

மாறாக கால் விரலில் உள்ள பிரச்சினைக்கு தீர்வைக் காணாது முழுக் காலையும் கழற்ற முயலும் முயற்சி மேலும் பல பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமைந்து விடும்.

எனவே எதிர்வரும் 14ம் திகதி மீள ஊடரங்கு தளர்த்தப்படும் போது மேற் குறித்த விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி மக்களுக்கு பயனுள்ள விதத்தில் நோயற்ற ஆரோக்கியமான நகரினை உருவாக்க ஒன்றுபடுவோம்.

  • பகதன்