தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தினை தொடர்ந்து பேண அரசு தீர்மானம்..!

0

அடுத்த இரண்டு வாரங்கள் கொரோனா நிலைமை தீவிரமடையலாம் என்ற மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையையடுத்து தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தினை தொடர்ந்து நடைமுறைப்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி குறிப்பிட்டளவு கால அவகாசத்தை இடையிடையில் மக்களுக்கு வழங்கி ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து அமுலில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அதேசமயம் கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் கால எல்லை 14 நாட்களாக இதுவரை இருந்த போதும் அதனை 21 நாட்களாக அதிகரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பியோருக்கு மீண்டும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்படும் நிலைமை உருவாகி வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறதுது.
சுமார் 50 தனிமைப்படுத்தல் நிலையங்கள் நாட்டில் உள்ளன. 48 நிலையங்களை இராணுவம் பராமரிக்கிறது. இதுவரை 3415 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து நலமுடன் வெளியேறியுள்ளனர்.

பேருவளை பகுதியில் உள்ள கிராமங்களை சார்ந்த சுமார் 25 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர். அங்கு கொரோனா நோயாளர்கள் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் 900 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள ஒருவர் நேற்று கொரோனா தாக்கி உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள 200 பேரளவில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

நோய் பரவலை தடுக்கும் வகையில் தம்புள்ளை பொருளாதார நிலையம் உட்பட பல நிலையங்கள் மூடப்பட்டன.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அதிக விலைக்கு பொருட்களை விற்போர் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தில் முறையிடலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.