கொரோனா தொடர்பில் அறிக்கையிடும் ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள்..!

0

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை அறிக்கையிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய 8 விடயங்களை சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரைகளை பின்பற்றி செய்திகளை அறிக்கையிடுவதன் மூலம் அரசினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களை மேலும் வெற்றியடைச் செய்ய முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.


இவ்விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவும் இக் காலகட்டத்தில் அதற்கு முகங் கொடுக்க அரசினால் கொண்டு செல்லப்படும் வேலைத் திட்டங்களுக்கு உதவிய எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ் வேலைத்திட்டத்தை மேலும் வெற்றி பெறச் செய்வதற்கு கீழ்வரும் பரிந்துரைகளுக்கு ஏற்ப ஊடக அறிக்கைகளை தயாரிக்க வேண்டும் என்று கோருகின்றோம்,


1. எப்போதுமே உண்மையும் உறுதிப்படுத்தப்பட்ட ஆதரங்களை மட்டும் பாவித்து அறிக்கைகள் தயார் செய்யப்பட வேண்டும்.

2. தனிமைப் படுத்தப்படும் நபர்களின் அல்லது நோயாளர்களின் இனத்தையோ மதத்தையோ குறிப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

3. வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நபர்களை நோயாளர்கள் என்று அறிமுகப்படுத்துங்கள். பிறருக்கு நோயை பரப்பும் நபர்கள் என்று அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.


4. ஆபத்தின் பரிமாணங்களை விஞ்ஞான ரீதியாகவும் தொழிநுட்ப ரீதியாகவும் அறிக்கையிட வேண்டும். பிறரின் தனிப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

5. தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளினதும் நபர்களினதும் புகைப்படங்களையும் காணொளிகளையும் அவர்களின் அனுமதியின்றி காண்பிக்க வேண்டாம்.

6. இறந்தவர்களின் இறுதிக்கிரியைகளின் புகைப்படங்களையோ காணொளிகளையோ காண்பிக்கும் போது அவற்றை மங்கலாக்கி காண்பிப்பது சிறந்தது.


7. மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் அறிக்கையிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

8. இந்நிலையில் மக்களிடையே மன அழுத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துவதைத் தவிர்த்து எதிர்காலத்தைப் பற்றி ஓர் ஆவல் மற்றும் ஒருவருக்கிடையே ஒத்துழைப்பை வளர்க்கும் விதத்தில் அறிக்கையிடுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.