கொரோனா குறித்து எச்சரித்த சீன மருத்துவர் காணாமல் போயுள்ளார்- சர்வதேச ஊடகங்கள்

0

கொரோனா குறித்து எச்சரிக்கை செய்ய முயன்றதால் சீன அதிகாரிகளால் கண்டிக்கப்பட்ட மற்றுமொரு மருத்துவரும் காணாமல் போயுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா உருவாகிய வுகான் மத்திய மருத்துவ மனையின் அவசர சேவை பிரிவை சேர்ந்த மருத்துவர் அய் பென்னே காணாமல் போயுள்ளார். கடந்த சில நாட்களாக அவரை காணமுடியவில்லை என 60 மினிட்ஸ் அவுஸ்திரேலியா ஊடகம் தெரிவித்துள்ளது.


இவரும் காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கலாம் என சிலர் அஞ்சுவதாக 60 மினிட்ஸ் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

வுகான் மத்திய மருத்துவமனையின் அவசர சேவைப் பிரிவின் தலைவரான இவர் கொரோனா குறித்த எச்சரிக்கையை நிறுத்துமாறு சீனா அதிகாரிகள் தன்னையும் தனது சகாக்களையும் அச்சறுத்தினாகள் என்ற விடயத்தை இரண்டு வாரங்களிற்கு முன்னரே வெளிப்படுத்தியிருந்தார் .

வுகான் மருத்துவமனைகளில் தனது சகாக்கள் பலர் உயிரிழப்பதை பார்த்ததாக தெரிவித்திருந்த மருத்துவர் கொரோனா வைரஸ் குறித்த ஆரம்ப எச்சரிக்கைகளை சீன அதிகாரிகள் மறைத்தனர் எனவும் குற்றம் சாட்டினார்.


சீன சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே வுகான் மத்திய மருத்துவ மனையின் இயக்குநர் அய்பென் இதனை தெரிவித்திருந்தார்.

டிசம்பரில் சார்ஸ் போன்ற வைரஸ் குறித்து மேலதிகாரிகளிற்கு தெரிவித்தமைக்காக எச்சரிக்கப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது மாயமாகியுள்ளார் என அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை என 60 மினிட்ஸ் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.


இதேவேளை 60 மினிட்ஸ் அவுஸ்திரேலியா இந்த தகவலை வெளியிட்ட பின்னர் காணாமல் போன மருத்துவரின் வெய்போவில் ( சீனாவின் டுவிட்டர்) வுகான் நகரத்தின் படத்துடன் மர்ம பதிவொன்று வெளியாகியுள்ளது.

இதேவேளை சுதந்திர ஆசிய வானொலி அய் எங்கிருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை அவருடன் நேரடியாக தொடர்புகொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் சீன காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டவர்களின் சமூக ஊடகங்கள் ஹக் செய்யப் படுவதும், அதன் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தாங்கள் எங்கே உள்ளனர் என்ற விபரத்தை வெளியிடுமாறு நிர்பந்திக்கப்படுவதும் வழமை என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த தகவல் பொய்யானது எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


கைதுசெய்யப்பட்டவர்கள் தங்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த மறுத்தால் அதிகாரிகளே அதற்குள் ஊருடுவி போலியான செய்திகளை பதிவிடுவார்கள் எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நபர் ஒருவர் சமூக ஊடகத்தில் செய்தியை அனுப்பினால் அவர் காணாமல் போனவரில்லை என தெரிவிப்பதற்கு சீன அதிகாரிகள் இதன் மூலம் முயல்கின்றனர் என சுதந்திர ஆசிய வானொலியும் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீன ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த கோடீஸ்வரர் ஒருவரும் மார்ச் மாதம் முதல் காணாமல் போயுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.