கடற்படையால் ரூ 1250 கோடிக்கும் அதிகமான பெறுமதியுள்ள போதைப் பொருள் மீட்பு..!

0

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுர 2020 மார்ச் 28 சனிக் கிழமையன்று காலை 9.30 மணியளவில் தீவின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல் மைல் (835 கி.மீ) தூர கடலில் போதைப் பொருளைக் கொண்டு சென்று கொண்டிருந்த ஒரு கப்பலைக் கைப்பற்றியது.
நாட்டின் கொடி (Flag state) இல்லாத இந்த வெளிநாட்டு கப்பலை சர்வதேச கடலில் கண்டறிந்த பின்னர் குறித்த கப்பல் கடற் படையினரால் சோதனை செய்யப்பட்டதுடன் அங்கிருந்து 500 கிலோ கிராம் ICE போதைப் பொருள் மற்றும் கோகோயின் என சந்தேகிக்கப்படும் 500 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டு பிடிக்கபட்டது.

மேலும் கப்பலில் 200 பாக்கெட் பாபுல் போதை மருந்து மற்றும் அடையாளம் காணப்படாத 100 கிராம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு (Street Value) இன்னும் கணக்கிடப் படவில்லை. இருப்பினும், மொத்த போதை மருந்துகளின் பெறுமதி ரூ 12,500.00 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்காக குறித்த வெளிநாட்டு கப்பல் ஏப்ரல் 01 ஆம் திகதி கடற்படையால் டிக்கோவிட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த கப்பலுடன் 9 பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டு வரும் போது கைது செய்யப்பட்ட மூன்றாவது வெளிநாட்டு கப்பல் இதுவாகும்.
இந்த சம்பவத்திற்கு முன்னர், பிப்ரவரி 22 மற்றும் 25 திகதிகளில் போதைப்பொருள் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் அவைகளில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடிக் கப்பலொன்று கைது செய்யபட்டதுடன் 16 வெளி நாட்டினர், 05 இலங்கையர்கள் மற்றும் கடலில் போதைப் பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள 06 இலங்கையர்கள் தீவின் தெற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படை செயற்கைக் கோள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வாறு தொடர்ந்து சர்வதேச கடலில் போதைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பற்றி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.

மேலும், போதைப் பொருள் விநியோகச் சங்கிலியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பங்காளர்களைப் பின் தொடர்வதற்காக இலங்கை கடற்படை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.