பட்டினிச் சாவை எதிர்த்துப் போராட அனைத்து வணக்கஸ் தலங்களும் முன்வர வேண்டும்..!

0

நாட்டில் அமுல்படுத்தபட்டுள்ள ஊரடங்கால் பட்டினியை எதிர் நோக்கி இருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாக வணக்கஸ்தலங்களும் ஏனைய பொது அமைப்புகளும் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில்,

கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியிலும், சிறிலங்காவிலும் அதிகரித்துச் செல்வதால் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.
பெண்தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், அங்கவீனர்கள், தினசரி வருமானத்துக்காக வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் சொல்லொணா வறுமைத் துன்பத்தில் அகப்பட்டு தவிக்கின்றனர்.

இது மிக மோசமான நிலைக்கு சென்று பட்டினிச்சாவை எதிர்நோக்கும் நிலை ஏற்படப் போகிறது என்பது கண்கூடாகத் தெரிகின்றது.
இந்நிலையில் இதுவரை உதவி வந்த பொது அமைப்புகள், தனவந்தர்கள் போன்றோரும் தமது உதவிகளை தொடரமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஆலயங்களும், கமநல கேந்திர நிலையங்களுக்குட்பட்ட கமக்கார அமைப்புகளும் தங்கள் அமைப்புக்களில் இருக்கு ஒரு பகுதி நிதியை அல்லலுறும் மக்களின் நிவாரணத்திற்காக உதவ முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக உரையாடியதாகவும் அவர்கள் தாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.